பல்லடம் நகராட்சி பகுதியில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்
- காதாரப் பணிகளை வார்டு கவுன்சிலர் சுகன்யா ஜெகதீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- வீடுகளில் வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் டயர்களில் தண்ணீர் தேங்கி அதில் கொசு உற்பத்தியாகிறது.
பல்லடம்:
பல்லடம் நகராட்சி பகுதியில் கடந்த சில தினங்களாக பருவ மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மழை நீர் தேக்கம் ஏற்பட்டு கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் நகராட்சி சுகாதாரத் துறை சார்பில், நகரில் பல்வேறு இடங்களில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. பல்லடம் 8-வது வார்டு பச்சாபாளையம் பகுதியில் நடைபெற்ற சுகாதாரப் பணிகளை வார்டு கவுன்சிலர் சுகன்யா ஜெகதீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கொசு உற்பத்தியை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறையினர் கூறியதாவது :-
பொதுமக்கள் தங்களது வீட்டில் குப்பைகள்,பயன்படுத்தாத டயர்கள், அம்மிக்கல் போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கழிவு நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நல்ல தண்ணீரில் தான் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. எனவே நல்ல தண்ணீரை உரிய முறையில் மூடி வைக்கவேண்டும். பொதுமக்கள் தண்ணீரை திறந்த நிலையில் வைக்ககூடாது. அவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகிவிடும். வீடுகளில் வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் டயர்களில் தண்ணீர் தேங்கி அதில் கொசு உற்பத்தியாகிறது. எனவே பொதுமக்கள் அதுபோன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.