போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் பல்லடம்
- திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
- திருமணம் போன்ற விஷேச நாட்களில் இந்த வாகன போக்குவரத்து எண்ணிக்கை 60 ஆயிரத்தை எட்டுகிறது.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, அவிநாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 81- ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்ற வண்ணம் உள்ளது. இதற்கிடையே திருமணம் போன்ற விஷேச நாட்களில் இந்த வாகன போக்குவரத்து எண்ணிக்கை 60 ஆயிரத்தை எட்டுகிறது. இந்த நிலையில் நேற்று (வியாழக்கிழமை) சுப முகூர்த்த நாள் என்பதால் கார் உள்ளிட்ட வாகனங்களின் எண்ணிக்கை, வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்த வண்ணம் சென்றது. இதனால் கோவை-திருச்சி மெயின் ரோட்டிலும், மங்கலம் ரோட்டிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அண்ணா நகர் முதல், பனப்பாளையம் தாராபுரம் ரோடு பிரிவு வரை, ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து சென்றன. இதற்கிடையே போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம் -ஒழுங்கு போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். அப்படி இருந்தும் அதிகமான வாகன போக்குவரத்தால் பல்லடம் நகரை கடந்து செல்வதற்கு சுமார் 20 நிமிடங்களுக்கு மேலானது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.