வளர்ச்சிப்பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை
- அடிப்படைத் தேவைகளான குடிநீர், சாலைவசதி, தெரு விளக்கு, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றிட வேண்டும்.
- மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் அனைத்துத் துறைகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்நடைபெற்றது. கலெக்டர் வினீத முன்னிலை வகித்தார்.
இதில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்ததாவது :-
தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் பரப்புரையின் போது திருப்பூர் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள், தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள், தேர்தல் அறிக்கையில் இடம் பெறாதவை, தொலைநோக்குத் திட்டங்கள் மற்றும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், ஆகிய திட்டங்கள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பொது மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், சாலைவசதி, தெரு விளக்கு, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றிட வேண்டும். தமிழக அரசின் அனைத்து வளர்ச்சித் திட்ட பணிகளும் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தங்களது பணிகளை சிறப்பான முறையில் மேற்கொண்டு நமது மாவட்டம் முன்னோடி மாவட்டமாக திகழ வேண்டும் என்றார்.
தொடர்ந்து, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 10 பெண் குழந்தைகளுக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் வைப்புத்தொகை பத்திரத்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.