உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

அவிநாசியில் மினி டைடல் பார்க் கட்டுமான பணிகள் தாமதம் ஆய்வு செய்த அதிகாரிகள் அதிருப்தி

Published On 2022-09-01 12:31 GMT   |   Update On 2022-09-01 12:31 GMT
  • தேர்வு செய்யப்பட்ட இடம், பல காலமாக பாறைக்குழி போன்று உள்ளது.
  • டெண்டர் விடப்பட்டு 3 மாதமாகியும் ஆரம்பக்கட்ட பணி கூட துவங்காமல் இருந்தது.

அவிநாசி :

தமிழகத்தில் திருப்பூர், வேலூர், தூத்துக்குடியில் மினி டைடல் பார்க் அமைக்கும் பணி நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி ராக்கியபாளையத்தில் 39 கோடி மதிப்பில் 7 அடுக்கில் மினி டைடல் பார்க் கட்ட அரசு புறம்போக்கில் இருந்த 2 ஏக்கர் நிலம் பெறப்பட்டு, பணி துவக்க டெண்டரும் விடப்பட்டது.

தேர்வு செய்யப்பட்ட இடம், பல காலமாக பாறைக்குழி போன்று உள்ளது. சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஆண்டுக்கணக்கில் அங்கு தேங்கியுள்ளது. அந்த கழிவுநீரை முற்றிலும் வெளியேற்றினால் தான் கட்டுமானப் பணி துவக்க முடியும் என்ற நிலையில், அதற்கான வழி தெரியாமல் கட்டுமான நிறுவனத்தினர் திணறி வந்தனர்.

இதனால் டெண்டர் விடப்பட்டு 3 மாதமாகியும் ஆரம்பக்கட்ட பணி கூட துவங்காமல் இருந்தது.அந்த இடத்தை பார்வையிட்ட டைடல் பார்க் தலைமை பொறியாளர் மற்றும் அதிகாரிகள், மாநிலத்தின் பிற இடங்களில் கட்டுமானப்பணி துவங்கி வேகமாக நடந்து வரும் நிலையில் இங்கு ஆரம்பக்கட்ட பணி கூட துவங்கப்படாமல் இருப்பது சரியல்ல என அதிருப்தி தெரிவித்தனர்.

இந்தநிலையில் தேங்கியிருந்த கழிவுநீர் அங்குள்ள வி.ஜி.வி., கார்டன் குடியிருப்புகளின் இடையே உள்ள வடிகால் வழியாக வெளியேற்றப்பட்டது. இதனால் கடும் துர்நாற்றம் எழுந்ததால் குடியிருப்புவாசிகள் அதிர்ச்சியடைந்து கழிவுநீரை வெளியேற்ற ஆட்சேபனை தெரிவித்தனர்.திருமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனர் முகமது சம்சுதீன், நகராட்சி தலைவர் குமார், இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் ஆகியோர் மக்களை சமாதானப்படுத்தினர்.

டைடல் பார்க் கட்டுமானப்பணி மேற்கொள்ளும் நிறுவனத்தினர் கூறுகையில், கட்டுமானப் பணி மேற்கொள்ள உள்ள இடத்தில் தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்றினால் தான் அந்த இடத்தின் வடிவமைப்பை தெளிவாக அறிந்துக் கொள்ள முடியும். அதன் பின்னரே கட்டுமானப் பணிக்கான வடிமைப்பு இறுதி செய்யப்படும் என்றனர்.

Tags:    

Similar News