மாவட்ட தொழில் மையம் சாா்பில் 1,448 பயனாளிகளுக்கு ரூ.417.66 கோடி கடன்உதவி
- 119 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.45.66 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.
- வேலைவாய்ப்பை அதிகரிப்பதே மாவட்ட தொழில் மையத்தின் பிரதான நோக்கம்.
திருப்பூர்:
திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தொழில் மையம் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் 1,448 பயனாளிகளுக்கு ரூ.417.66 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினாா்.
பின்னா் அவா் பேசியதாவது:-
தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா். அந்தந்த மாவட்டகளில் உள்ள தொழில்களை வளா்ப்பதற்கும், புதிய தொழில்முனைவோா்களை உருவாக்குவதற்கும் தேவையான உதவிகள் மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படுகிறது. சிறு, குறு தொழில்கள் மூலம் வேலைவாய்ப்பை அதிகரிப்பதே மாவட்ட தொழில் மையத்தின் பிரதான நோக்கம் என்றாா்.
முகாமில் மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் 1,122 பேருக்கு ரூ.385.50 கோடி மதிப்பீட்டிலும், அண்ணல் அம்பேத்கா் முன்னோடிகள் திட்டத்தில் 6 பேருக்கு ரூ.1.87 கோடி மதிப்பீட்டிலும், புதிய தொழில்முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தில் 6 பேருக்கு ரூ.11.99 கோடி, வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் 6 பேருக்கு ரூ.47 லட்சம், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் 65 பயனாளிக்கு ரூ.10.25 கோடி என மொத்தம் 1,448 பயனாளிகளுக்கு ரூ.417.66 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டன.
முன்னதாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 25 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.20.87 லட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனம் உட்பட 119 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.45.66 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் துணைமேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் லட்சுமணன், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) வரலட்சுமி, மாவட்ட தொழில் மைய மேலாளா் ராமலிங்கம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ரவி, மாவட்ட மேலாளா் (தாட்கோ) ரஞ்சித்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.