குண்டடம் பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை பணிகள் தீவிரம்
- பி.ஏ.பி. பாசனத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் அதிகப்படியான அளவில் பயிர் செய்து வருகின்றனர்.
- சின்னவெங்காயம் பயிர்செய்தபோது நல்ல விலைக்கு விற்பனையானது.
குண்டடம் :
குண்டடம் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதி என்பதால் குண்டடம் சூரியநல்லூர், மேட்டுக்கடை, தும்பலப்பட்டி, வெறுவேடம பாளையம், குங்குமம்பாளையம், ஒத்தக்கடை, உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர்செய்கின்றனர்.அதன்படி சின்னவெங்காய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.
இது குறித்து விவசாயி ஈஸ்வரன் கூறியதாவது :-குண்டடம் பகுதி பொதுவாகவே வறட்சியான பகுதி என்பதால் குறைந்த அளவு தண்ணீரை கொண்டு நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை விவசாயம் செய்துவருகிறோம். கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழை மற்றும் பி .ஏ. பி .பாசனத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் அதிகப்படியான அளவில் தக்காளி, மிளகாய், கத்திரி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பயிர்செய்துவருகிறோம்.
மேலும் இந்தப்பயிர்களுக்கு ஏற்ற நிலம் என்பதால் நல்ல மகசூல் தருகிறது. கடந்த வருடத்தில் சின்னவெங்காயம் பயிர்செய்தபோது நல்ல விலைக்கு விற்பனையானது. இதனால் இப்பகுதி விவசாயிகள் சின்ன வெங்காய பயிர்களை அதிகளவில் பயிர்செய்துள்ளனர் .இதில் கோ ஆன் 5 மற்றும் ஒரிசா நாற்று ரகங்களை பயிர்செய்ய 1 ஏக்கருக்கு விதைகள், கூலி, களை எடுத்தல், இடுபொருட்கள் உட்பட ஏக்கருக்கு 1லட்சம் வரை செலவாகிறது.
இப்பகுதி விவசாயிகள் விதை மற்றும் காய் நடவு மற்றும் நாற்று நடவு என ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்துள்ளனர். இந்த நிலையில் சின்ன வெங்காய பயிர்கள் 100 நாட்கள் முடிவடைந்த நிலையில் அறுவடை செய்து வருகின்றனர். ஏக்கருக்கு 7 டன் வீதம் கிடைக்கவேண்டிய மகசூல் 3 டன் வரை மட்டுமே கிடைத்தது .மேலும் சின்ன வெங்காயம் கிலோ ரூ.20முதல் 30 வரை விற்பதால் ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை நஷ்டமடைந்துள்ளனர்.
தற்போது அறுவடை செய்யும் பயிர்களின் மூலம் வருவாய் கிடைத்தால் மட்டுமே வாழ்வாதாரம் பாதிப்படையாமல் இருக்கும் என்ற நிலையில் உரம் மற்றும் இடு பொருட்களின் விலை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால் 100 நாட்கள் கஷ்டப்பட்டு பயிர்செய்து ஆட்கள் பற்றாக்குறை சமாளித்து உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்காமல் போனதால் கவலை அடைந்துள்ளனர். எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பாற்றவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.