கலிலியோ அறிவியல் கழகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி
- 75 நிகழ்வுகள் 75 இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
- தன்னம்பிக்கை என்பது பள்ளி மாணவர்களுக்கு மிகவும் அவசியம்.
மடத்துக்குளம் :
75 வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவாக உடுமலையில் கொண்டாட பல்வேறு தன்னார்வ அமைப்புகள் இணைந்து 75 நிகழ்வுகள் 75 இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் மற்றும் உடுமலை சுற்றுச்சூழல் சங்கத்தின் சார்பாக உடுமலை ஆர்.ஜி.எம். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீ விசாலாட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ,பெத்தேல் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, என்.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் கணக்கும் இனிக்கும் என்ற தலைப்பில் கணிதம் பற்றிய அறிவையும், கணித பாடம் மிகவும் எளிது என்பதை எடுத்துரைக்கும் விதமாகவும் மாயசதுரங்களை எவ்வாறு அமைப்பது என்பது பற்றியும், தங்களது பிறந்த தேதியை கூட எவ்வாறு மாய சதுரமாக மாற்றுவது என்பது பற்றியும் ஓய்வு பெற்ற ரயில்வே நிலைய மேலாளர் ஜோதிலிங்கம் மிகச் சிறப்பாக மாணவர்களுக்கு எடுத்துக்காட்டினார்.
மேலும் அறிவியல் என்றாலே, ஏன் எதற்கு எப்படி என்ற கேள்விகளை கேட்பது அத்தகைய அறிவியல் விழிப்புணர்வு நிகழ்வினை அறிவியல் தன்னார்வலர் பிரபாகரன் செய்து காண்பித்தார். அதனைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற மதுரை ரயில்வே நிலையம் பாலசுப்பிரமணியன் தன்னம்பிக்கை என்பது பள்ளி மாணவர்களுக்கு மிகவும் அவசியம். எதிர்காலத்தில் பல்வேறு சாதனைகளை நீங்கள் நிகழ்த்த வேண்டும் என்று தன்னம்பிக்கை கருத்தை வலியுறுத்தி 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி மற்றும் ஸ்லோகன் எழுதும் போட்டி ஆகியவை உடுமலை தேஜஸ் மஹாலில் நடைபெற்றது. உடுமலை மற்றும் மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். கனவு இந்தியா 2047 என்பதை கருத்தாக கொண்டு நடத்தப்பட்ட இப் போட்டிகளில் ஐந்தாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் உடுமலை சுற்றுச்சூழல் சங்கத் தலைவர் மணி, செயற்குழு உறுப்பினர் சசிகுமார், மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் ஒருங்கிணைத்தார். நாளை முதல் 14 ந் தேதி வரை உடுமலை தளி ரோட்டில் உள்ள தேஜஸ் மஹாலில் அறிவியல் விஞ்ஞானிகள், தபால் தலை, ஆயுத கண்காட்சிகள் , விடுதலைப் போராட்ட வீரர்களின் கண்காட்சி மற்றும் ரோபோடிக்ஸ் செயற்கை நுண்ணறிவு பற்றிய செயல் விளக்கம், இரவு வான் நோக்கும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற உள்ளது. மாணவர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு கண்காட்சியையும் வான்நோக்கும் நிகழ்ச்சியையும் கண்டு களிக்கலாம்.தொடர்புக்கு கண்ணபிரான் 8778201926 என்பவரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.