ராமதாஸ் குறித்த முதல்வரின் கருத்து - மன்னிப்பு கேட்கும் பழக்கம் இல்லை என்கிறார் சேகர்பாபு
- தமிழில் உபயோகப்படுத்துற வார்த்தை தானே அது.
- எங்கள் முதல்வர் கண்ணியத்திற்கு பாதுகாவலராக இருப்பவர்.
அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது குறித்தும், தமிழ்நாடு மின் வாரியத்தின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அதானி சந்திப்பு பற்றி முதலமைச்சர் விளக்க வேண்டும் என்றும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "டாக்டர் ராமதாசுக்கு வேறு வேலை இல்லை. தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிடுவார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை" என்று காட்டமாக பதில் அளித்தார்.
இதற்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ராமதாஸ் குறித்து முதலமைச்சர் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எல்லாரும் கூறுகிறார்களே என்று கேட்டதற்கு...
எல்லாருமேன்னா நாடு முழுக்க சொல்லிச்சா.. எப்படி.. எதுக்கு மன்னிப்பு கேட்கணும்.. என்ன சொன்னாரு அவரு... தேவை இல்லாத ஏதாவது ஒரு அறிக்கை தினந்தோறும் விடுறாருன்னு சொல்றாரு. அதுல என்ன தப்பு இருக்கு. தமிழில் உபயோகப்படுத்துற வார்த்தை தானே அது. பயன்படுத்தக் கூடாத வார்த்தை கிடையாதே. அது எப்படி தவறுன்னு சொல்ல முடியும். கடந்த காலங்களில் அவர் வெளியிட்ட அறிக்கைகள் எல்லாம் எடுத்து பாருங்கள். கொச்சையாக ... யாரையும் தரம் தாழ்ந்து பேசுகிற சூழலில் இருப்பவர். எங்கள் முதல்வர் கண்ணியத்திற்கு பாதுகாவலராக இருப்பவர். கண்ணியத்திற்கு குறைவாக எதையும் பேசவில்லை. ஆகவே அப்படி பேசுகிற சூழலும் எங்கள் முதல்வருக்கு எப்போதும் ஏற்படாது. மன்னிப்பு கேட்கின்ற பழக்கம் எங்களுக்கு இல்லை. தவறு என்று இருந்தால் நிச்சயம் முதல்வர் அதற்கு உண்டான பிராயச்சித்தத்தை தேடுவார். அவர் கூறிய வார்த்தையில் எள்ளளவும் தவறு இல்லை என்றார்.