- கல்லம்பாளையம் பகுதியில் குடிநீர் மற்றும் சப்பை தண்ணீர் விநியோகம் செய்ய ஒரே ஒரு பணியாளர் உள்ளார்.
- நகராட்சி சார்பில் நடைபெறும் விழாக்களுக்கு, நகர்மன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு இல்லை.
பல்லடம் :
பல்லடம் நகராட்சி சாதாரணக் கூட்டம் நகராட்சி தலைவர் கவிதாமணி தலைமையில் கூட்டரங்கில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் விநாயகம் முன்னிலை வகித்தார்.இந்த கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் பின் வருமாறு:- பாலகிருஷ்ணன், (தி.மு.க.):- கல்லம்பாளையம் பகுதியில் குடிநீர் மற்றும் சப்பை தண்ணீர் விநியோகம் செய்ய ஒரே ஒரு பணியாளர் உள்ளார். அவரையும் வரி வசூல் செய்ய அழைத்து விடுகின்றீர்கள். அதனால், தண்ணீர் சப்ளை பாதிக்கிறது .எனவே கூடுதல் ஆட்களை நியமிக்க வேண்டும்.
ராஜசேகரன், (தி.மு.க.):- நகராட்சி சார்பில் நடைபெறும் விழாக்களுக்கு, நகர் மன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு இல்லை. சென்ற வாரத்தில் நகராட்சி கூட்ட அரங்கில், அமைச்சர் கலந்து கொண்ட விழா நடைபெற்றது. அதற்கு அழைப்பு இல்லை. பெரிய திட்டப் பணிகள் நடைபெறும் போது அதன் துவக்க விழாவிற்கும் அழைப்பு விடுப்பதில்லை. மக்கள் பிரதிநிதிகளான எங்களை ஏன் புறக்கணிக்கிறீர்கள். நகராட்சி தலைவர் கவிதா மணி : இனி இது போல் நடக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த கூட்டத்திற்கு கருப்பு சட்டை அணிந்து வந்த 6 வது வார்டு கவுன்சிலர் ஈஸ்வரமூர்த்தி : - ராகுல் காந்தியை பதவி நீக்கம் செய்ததை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளேன். என்று பேசினார் அப்போது இடைமறித்த 18 வது வார்டு பாஜக. நகர்மன்ற உறுப்பினர் சசிரேகா, நகர்மன்ற கூட்டத்தில் உள்ளூர் விஷயத்தை பேசுங்கள் என கூறினார். இதற்கு பதில் அளித்த ஈஸ்வரமூர்த்தி பிரதமருக்கு நன்றி தெரிவித்து நீங்கள் இந்த கூட்டத்தில் பேசலாமா, நான் எனது கருத்தை இங்கு பதிவு செய்வதற்கு உரிமை உள்ளது என இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நகராட்சி ஆணையாளர் விநாயகம் இருவரையும் சமரசம் செய்தார். பின்னர் 12 வது வார்டு அண்ணா நகரில் ரூ.15 லட்சம் செலவில் கழிவு நீர் சுத்திகரிப்பு தொட்டி அமைப்பது உள்ளிட்ட 68 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.