வட்டி குறைப்பு அறிவிப்பு வெளியாகாததால் மின் கட்டணத்தை செலுத்த முடியாமல் தவிக்கும் விசைத்தறியாளர்கள்
- கடந்த செப்டம்பர் மாதம் விசைத்தறிக்கான மின் கட்டணம், யூனிட் ஒன்றுக்கு ரூ. 1.40 உயர்த்தப்பட்டது.
- முதல் 1000 யூனிட் வரை சலுகை வழங்கப்பட்டது.
திருப்பூர் :
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் விசைத்தறி தொழில் பிரதானமாக உள்ளது. இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.ஏற்ற, இறக்கத்துடன் கூடிய சந்தை நிலவரம், மூலப்பொருட்களான பஞ்சு, நூல் ரகங்கள் விலையில் தினமும் ஏற்படும் மாற்றங்கள், உரிய ஒப்பந்தக்கூலி கிடைக்காமை, உதிரி பாகங்கள் விலை உயர்வு, தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது விசைத்தறி தொழில்.
கடந்த செப்டம்பர் மாதம் விசைத்தறிக்கான மின் கட்டணம், யூனிட் ஒன்றுக்கு ரூ. 1.40 உயர்த்தப்பட்டது. அதிர்ச்சி அடைந்த விசைத்தறியாளர்கள் மின் கட்டணத்தை செலுத்துவதை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரசிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் மின் கட்டணம், 50 சதவீதம் குறைக்கப்பட்டது. முதல் 1000 யூனிட் வரை சலுகையும் வழங்கப்பட்டது. இதையடுத்து விசைத்தறியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு விசைத்தறிகளை இயக்கினர்.
கடந்த 9 மாதங்களாக மின் கட்டணம் செலுத்தாததால், ஒவ்வொரு விசைத்தறி கூடங்களுக்கும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ. 2 லட்சம் வரை பில்கள் வந்துள்ளன.அதில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்துடன் அபராதத்தொகை மற்றும் வட்டியும் சேர்த்து கணக்கிடப்பட்டுள்ளது.குறைக்கப்பட்ட மின் கட்டணத்தை அபராதத்துடன் செலுத்த தயாராக உள்ளதாகவும், நிலுவைத் தொகையை கட்ட தவணை வேண்டும்.வட்டியை ரத்து செய்ய வேண்டும் என விசைத்தறியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். 6 தவணைகளில் நிலுவைத்தொகையை செலுத்தலாம் என மின் வாரியம் அறிவித்துள்ளது.
வட்டி குறைப்பு குறித்து முறையான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இதனால் விசைத்தறியாளர்கள் மின் கட்டணத்தை செலுத்த முடியாமல் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இது குறித்து விசைத்தறி சங்க நிர்வாகிகள் கூறுகையில், குறைக்கப்பட்ட மின் கட்டண அடிப்படையில் நிலுவைத் தொகையை செலுத்த தயாராக உள்ளோம். ஆனால், அதுகுறித்தும் வட்டியை ரத்து செய்வது குறித்தும் எந்த அறிவிப்பும் இதுவரை வரவில்லை. இதனால் ஒவ்வொரு விசைத்தறியாளர்களுக்கும் மின் கட்டண தொகை சுமையாக மாறியுள்ளது.மின் துறை அமைச்சர், மின் வாரிய சேர்மன் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. என்ன செய்வது என புரியவில்லை என்றனர்.