மின்கட்டணத்தை குறைக்க கோரி அமைச்சரிடம் விசைத்தறியாளர்கள் மனு
- தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது.
- விசைத்தறியாளர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த மார்ச் மாதம் மின் கட்டணம் குறைக்கப்பட்டது.
பல்லடம்:
திருப்பூர்,கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து விசைத்தறி கூடங்கள் மின் கட்டண உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் விசைத்தறியாளர்கள் மின் கட்டணத்தை குறைக்க கோரி அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். விசைத்தறியாளர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த மார்ச் மாதம் மின் கட்டணம் குறைக்கப்பட்டது. ஆனால் விசைத்தறியாளர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். மின் கட்டணம் கட்டாமல் உள்ள நிலுவை தொகைக்கு அபராதம் விதிக்கக் கூடாது. நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை தவணை முறையில் கட்ட அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் சென்னையில் நிதி மற்றும் மின் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், பூபதி, தெக்கலூர் பொன்னுச்சாமி, கதிர்வேல் மற்றும் மருத்துவர் கோகுல், அவிநாசி பழனிச்சாமி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளனர்.