உள்ளூர் செய்திகள்

கே .வி .ஆர். நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருக்கை வசதி இல்லாததால் நீண்ட நேரமாக காத்திருந்த கர்ப்பிணி பெண்கள்.

இருக்கை வசதி இல்லாமல் அவதிப்படும் கர்ப்பிணி பெண்கள் நீண்ட நேரமாக காத்திருக்கும் அவலம்

Published On 2022-10-11 08:02 GMT   |   Update On 2022-10-11 08:02 GMT
  • செவ்வாய்க்கிழமை தோறும் கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனைகள் செய்யப்படுவது வழக்கம்.
  • பரிசோதனைக்கு ஏராளமான கர்ப்பிணி பெண்கள் வந்திருந்தனர்.

 திருப்பூர் :

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் வாரத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் கர்ப்பிணி பெண்களுக்கு பொது பரிசோதனை, ரத்த பரிசோதனை, குழந்தையின் வளர்ச்சி, இதயத்துடிப்பு போன்ற பரிசோதனைகள் செய்யப்படுவது வழக்கம். இதனால் செவ்வாய்க்கிழமை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் திருப்பூர் கே. வி .ஆர். நகர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று காலை வழக்கம் போல் பரிசோதனைக்கு ஏராளமான கர்ப்பிணி பெண்கள் வந்திருந்தனர். ஆனால் ஆரம்ப சுகாதார வளாகத்தில் போதிய இருக்கை வசதி இல்லாததால் நீண்ட நேரமாக கர்ப்பிணி பெண்கள் நின்று கொண்டிருந்தனர்.

மேலும் பெண்கள் கூறுகையில், வாரம் தோறும் இங்கு பரிசோதனைக்கு வந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இங்கு போதைய இருக்கை வசதி இல்லை. இதனை மாநகராட்சி நிர்வாகம் கவனத்தில் எடுத்துக் கொண்டு கர்ப்பிணிப் பெண்களின் வசதிக்காக கூடுதல் இருக்கை மற்றும் கூடுதல் மருத்துவரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இது தொடர்பாக 44- வது வார்டு கவுன்சிலர் அன்பகம் திருப்பதியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- திருப்பூர் மாநகராட்சியின் மிகப்பெரிய வார்டான 44 வது வார்டில் ஒரே ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் தான் உள்ளது. இங்கு ஏராளமான பெண்கள் பரிசோதனைக்கு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தான் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவரை நியமிக்க வேண்டும் .போதிய இருக்கை வசதி செய்து கொடுக்க வேண்டும் என நான் ஏற்கனவே மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையரிடம் மனு கொடுத்துள்ளேன். மீண்டும் இது தொடர்பாக அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தி விரைவில் கர்ப்பிணி பெண்களுக்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும் என்றார்.

Tags:    

Similar News