உள்ளூர் செய்திகள்

போட்டியில் மாடுகள் இலக்கை நோக்கி சீறி பாய்ந்த காட்சி. 

உடுமலை அருகே தி.மு.க. சார்பில் ரேக்ளா போட்டி

Published On 2023-05-29 08:03 GMT   |   Update On 2023-05-29 08:03 GMT
  • முன்னாள் முதல்- அமைச்சர் மு.கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி ரேக்ளா போட்டி நடத்தப்பட்டது.
  • போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

உடுமலை :

தமிழ்நாடு முன்னாள் முதல்- அமைச்சர் மு.கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி தி.மு.க. சார்பில் உடுமலை அடுத்த அமராவதி அருகே ரேக்ளா போட்டி நடத்தப்பட்டது. போட்டியை திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ., இரா.ஜெயராமகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் பங்கேற்பதற்காக காங்கேயம், பொள்ளாச்சி, தாராபுரம், ஒட்டன்சத்திரம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாட்டு வண்டிகள் அமராவதி பகுதிக்கு சரக்கு வாகனத்தில் வருகை தந்தது.போட்டி 200 மற்றும் 300 மீட்டர் என இரு பிரிவுகளில் நடைபெற்றது. இதில் 200 மீட்டர் பிரிவில் 293 வண்டிகளும் 300 மீட்டர் பிரிவில் 79 வண்டிகளும் கலந்து கொண்டன.அதற்கு முன்பாக போட்டியில் கலந்து கொள்ள வருகை தந்த உரிமையாளர்கள் நுழைவுக் கட்டணத்தை செலுத்தி டோக்கன் பெற்றுக்கொண்டனர். அதைத் தொடர்ந்து ஒலிபெருக்கி மூலமாக ஒன்றன்பின் ஒன்றாக வரிசைப்படி மாட்டு வண்டிகள் அழைக்கப்பட்டது. இதையடுத்து வண்டிகளில் பூட்டப்பட்ட மாடுகள் இலக்கை நோக்கி சீறி பாய்ந்து சென்றது.போட்டியை பொதுமக்கள் பாதுகாப்பாக பார்த்து ரசிக்கும் வகையில் உடுமலை- அமராவதி சாலையின் இரண்டு புறங்களில் இரும்பு தடுப்புகள் வைத்து கட்டப்பட்டு இருந்தது. அங்கு திரண்ட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் விசில் அடித்தும் கைதட்டியும் மாட்டு வண்டி உரிமையாளர்களை உற்சாகப்படுத்தினார்கள். போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முதல் பரிசாக ஒரு பவுன் தங்க நாணயமும்,2-ம் பரிசாக ½ தங்க நாணயமும் 3-ம் பரிசாக ¼ தங்க நாணயமும், நான்காம் பரிசாக ஒருகிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டது.

மேலும் ஆறுதல் பரிசாக கோப்பைகளும் வழங்கப்பட்டது. போட்டி நடைபெறுவதையொட்டி அமராவதிக்கு சென்ற வாகனங்கள் தம்புரான் கோவில் வழியாக மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.மேலும் அமராவதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Tags:    

Similar News