உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

பக்கவாத நோய்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு பிசியோதெரபி நிபுணர்களை நியமிக்க கோரிக்கை

Published On 2023-08-08 07:11 GMT   |   Update On 2023-08-08 07:11 GMT
  • பக்கவாத நோய்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய பிசியோதெரபி நிபுணர்களை நியமிக்க வேண்டும்
  • மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளிலும் ஒரு சில பிசியோதெரபிஸ்டுகளே உள்ளனர்.

 தாராபுரம்,ஆக.8-

அரசு மருத்துவமனைகளில் பக்கவாத நோய்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய பிசியோதெரபி நிபுணர்களை நியமிக்க வேண்டும் என பிசியோதெரபிஸ்ட் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் செயலாளர் டாக்டர் ராஜேஸ்கண்ணா கூறியதாவது:- அதிகரித்து வரும் சர்க்கரை நோயின் தாக்கம், உயர் ரத்த அழுத்தம், மாறிவரும் உணவுப் பழக்க வழக்கங்கள், மன அழுத்தம் காரணமாக பக்கவாதத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அறிகுறிகள் தெரிந்த, நான்கரை மணி நேரத்துக்குள் சிகிச்சை அளித்தால் முழுமையாக குணப்படுத்தவோ, பாதிப்பை குறைக்கவோ முடியும்.

பக்கவாத பாதிப்பு தமிழகத்தில் அதிகரிக்க, அரசு மருத்துவமனைகளில் போதிய பிசியோதெரபி மருத்துவர்கள் இல்லாதது, பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லாததே காரணம். இதனால் கிராமப்புறத்தினர் இந்நோயால் பாதிக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் உடல் ஊனத்துடனே வாழ வேண்டிய சூழல் உள்ளது. அறிகுறிகள் தெரிந்த உடனே சிகிச்சை அளிக்க ஆரம்ப, வட்டார மருத்துவமனைகளில் போதிய மருத்துவ வசதிகள் இல்லை.

பிசியோதெரபிஸ்ட்டுகளும் நியமிக்கப்படவில்லை. மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளிலும் ஒரு சில பிசியோதெரபிஸ்டுகளே உள்ளனர். இந்நிலை நீடித்தால், தமிழகத்தில் பக்கவாதத்தால், உடல் ஊனம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உடனடியாக, பிசியோதெரபிஸ்டுகளை நியமிக்க வேண்டும். பயிற்சி பிசியோதெரபிஸ்டுகளை ஊக்க ஊதியத்துடன் தற்காலிகமாக பணியில் அமர்த்தவும் உத்தரவிட வேண்டும்.

பொது மக்களிடம் பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News