உள்ளூர் செய்திகள்

கொள்ளை நடந்த வீடு.

பல்லடத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 3 லட்சம் கொள்ளை -மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

Published On 2023-03-17 11:52 GMT   |   Update On 2023-03-17 11:52 GMT
  • கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன் கிளம்பிச் சென்றனர்.
  • மர்ம நபர்கள் 2 பேர் அங்கிருந்து வேகமாக தப்பி செல்வதாகவும் தகவல் தெரிவித்தனர்.

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் வேலம்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 62). இவர் வாய்க்கால்மேடு பகுதியில் தனக்கு சொந்தமான வீட்டின் மாடியில் குடியிருந்து கொண்டு கீழ் தளத்தில் உரக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை சுமார் 6 மணியளவில் பழனி அருகே உள்ள கணக்கம்பட்டியில் உள்ள ஒரு கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன் கிளம்பிச் சென்றனர். இந்த நிலையில் அவருக்கு சுமார் காலை 8.30 மணி அளவில் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதாகவும், மர்ம நபர்கள் 2 பேர் அங்கிருந்து வேகமாக தப்பி செல்வதாகவும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக பாலசுப்பிரமணியம் இது குறித்து அவினாசிபாளையம் போலீசில் புகார் தெரிவித்தார். பின்னர் பழனியிலிருந்து அவர் உடனடியாக வீடு திரும்பினார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் 2 மர்ம நபர்கள் காலை சுமார் 7 மணியளவில் வீட்டிற்கு வருவதும், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று நகை மற்றும் பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு வெளியே செல்வதும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. மேலும் வீட்டின் உரிமையாளர் பாலசுப்பிரமணியத்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வீட்டில் இருந்த 4 பவுன் தங்க நகை, ரொக்கம் ரூ.3 லட்சம் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை திருடு போனது தெரிய வந்தது. உடனடியாக கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இது குறித்து அவினாசிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். திருப்பூர்- தாராபுரம் பிரதான சாலையில் அதிகாலை நேரத்தில் திருட்டுப் போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News