உள்ளூர் செய்திகள்

இயற்கை எரிவாயுவில் இயங்கும் பயணிகள் பேருந்து

Published On 2022-12-06 05:36 GMT   |   Update On 2022-12-06 05:36 GMT
  • இயற்கை எரிவாயுவில் இயங்கும் பயணிகள் பேருந்து முதன் முறையாக திருப்பூரில் ஓட உள்ளது பெரும் எதிர்பார்ப்பையும், பாராட்டையும் பெற்று வருகிறது.
  • தனி நபர் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு 450 முதல் 1200 கிலோ கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை தடுக்கலாம்.

திருப்பூர் : 

மக்கள் தொகை பெருக்கம், மழைக்காடுகள் அழிப்பு, தொழிற்சாலைகள் அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் பருவநிலை மாறுதல் ஏற்பட்டு காலம் தவறிய மழை, எல்நினோ, டைபூன், அதீத வறட்சி போன்றவை உலகெங்கிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

அதிக கார்பன் உமிழ்வால் ஆர்டிக், அண்டார்டிகா பனிப்பாறைகள் உருகி வருவதால் கடல் மட்டம் உயர்வு போன்றவற்றால் பெரும் பாதிப்புகளை மக்கள் சந்தித்து வருகின்றனர்.

இதில் பல்லாயிரம் கோடி இழப்புகளும், உயிர் பலிகளும் ஏற்பட்டு வருகிறது. மேலும் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தாவிடில் பேரழிவுகள் நிகழும் என அறிவியலாளர்கள் எச்சரித்து வருகின்றனர். மேலும் மக்கள் கார் உள்ளிட்ட வாகனங்களை தனிநபர் ஒருவராக இயக்குவதை விட பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவதன் மூலம் தனி நபர் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு 450 முதல் 1200 கிலோ கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை தடுக்கலாம்.

இயற்கை எரிவாயுவில் இயங்கும் வாகனங்கள்:

இதில் தற்போது அடுத்த கட்டமாக டீசல் பயன்பாட்டில் இருந்து எல்.பி.ஜி., சி.என்.ஜி., எனப்படும் எரிவாயுவில் இயங்கும் வாகனங்களை பயன்படுத்தினால் மேலும் கார்பன் உமிழ்வை தடுக்கலாம் என பல ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.

தற்போது இதில் அடுத்த வருங்கால தொழில் நுட்பமாக மின்சார வாகன பயன்பாடும் அதிகரித்து வருகிறது. தற்போது பெரிய நகரங்களில் மின்சாரத்தின் மூலம் பேட்டரிகளில் இயங்கும் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது.

இது கார்களிலும் பயன்படுத்தப்பட்டு வருவது அடுத்த கட்ட தொழில்நுட்ப பாய்ச்சலாக பார்க்கப்படுகிறது. இத்தொழில்நுட்பம் கார்பன் உமிழ்வே இல்லாத ஒன்று எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கனரக வாகனங்கள் கூட தற்போது இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் வகையில் சந்தையில் வந்து விட்டன. ஆனால் பயணிகள் பேருந்துகளில் இத்தொழில்நுட்பம் இன்னும் பரவலாக புழக்கத்துக்கு வரவில்லை.‌ இந்நிலையில் கார்பன் உமிழ்வை குறைக்கும் வகையில் இளைஞரின் எண்ணத்தில் பதிந்ததின் விளைவாக முதல் இயற்கை எரிவாயுவில் இயங்கும் பயணிகள் பேருந்து முதன் முறையாக திருப்பூரில் ஓட உள்ளது பெரும் எதிர்பார்ப்பையும், பாராட்டையும் பெற்று வருகிறது.

பல்லடம் இளைஞரின் புதிய முயற்சி:

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் கோகுல்நாத். இவரது குடும்பத்தினர் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக பேருந்து சேவையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் டீசல் விலை உயர்வு, கொரோனா ஊரடங்கு பாதிப்பு மற்றும் வாகனங்களின் பெருக்கம் ஆகியவற்றால் பேருந்து சேவை தொழிலானது நஷ்டமடைந்துள்ளது.

இந்நிலையில் பேருந்துகளின் சேவையில் பிரதான செலவாக உள்ள டீசல் செலவை கட்டுப்படுத்தும் வகையில், தனியார் பேருந்து தயாரிக்கும் நிறுவனத்திடம் சிஎன்ஜி முறையில் ஓடக்கூடிய புதிய பேருந்து ஒன்றினை தயார் செய்ய கோகுல் நாத் முயற்சி எடுத்துள்ளார்.

இந்த பேருந்தில் சிஎன்ஜி. எரிவாயுவை நிரப்பும் வகையில் கொள்கலன்கள் அமைக்கப்பட்டு, குறிப்பாக காசு மாற்றினை குறைக்கும் வகையில் முற்றிலும் புகையே வெளியேறாத வகையில் இந்த பேருந்தானது அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேருந்து உரிமையாளர் கூறுகையில், டீசல் விலை உயர்வு, கொரோனா ஊரடங்கு பாதிப்பு மற்றும் வாகனங்களின் பெருக்கம் ஆகியவற்றால் பேருந்து சேவை தொழிலில் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம்.

இதன் காரணமாக பேருந்திற்கான பராமரிப்பு செலவை குறைக்கும் வகையில் யோசனை செய்து இந்த புதிய முறையை ஏற்பாடு செய்துள்ளோம். அதனடிப்படையில் அசோக் லேலண்ட் நிறுவனத்திடம் பேசி, டீசல் டேங்கிற்கு பதிலாக 90 லிட்டர் அளவிலான சிஎன்ஜி., எனப்படும் இயற்கை எரிவாயுவை நிரப்ப நான்கு கொள்கலன்களை அமைத்துள்ளோம்.

மேலும் எரிவாயுவை வேகமாக நிரப்ப கூடிய வகையில் வடிவமைப்பை அமைத்துள்ளதாகவும், 90 கிலோ சிஎன்ஜி. கேஸ் நிரப்பலாம். இது 600 லிட்டர் டீசலுக்கு சமமானது எனவும் தெரிவித்தார்.

மேலும் இந்த பேருந்தில் பயன்படுத்தப்படும் இயற்கை எரிவாயுவும், டீசலும் லிட்டர் அளவில் விலை வேறுபாடு 40 ரூபாய் அளவில் வருகிறது. குறிப்பாக தற்போதைய சூழ்நிலையின் முக்கிய பிரச்சினையான காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் புகை என்பது அறவே பேருந்தில் இருந்து வராது எனவும், சோதனை அடிப்படையில் தாங்கள் பேருந்தை இயக்கி பார்த்த போது, வேகம் மற்றும் இழுவை என்பது எந்த மாற்றமும் தெரியவில்லை எனவும் தெரிவித்தார்.

எரிவாயு பொருட்களின் விலை உயர்வை சமாளிக்கும் அதே நேரத்தில் இயற்கையை பாதிக்காமல் இருக்கும் இந்த வகையான பேருந்துகள் தயார் செய்வதில் அரசு கவனம் செலுத்துவதுடன், அரசு பேருந்துகளும் இதே போன்ற முறையை ஏற்படுத்தினால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என அவர் கூறினார்.

இன்னும் பேருந்து பயணிகளின் பயன்பாட்டுக்கு வரவில்லை. ஆனால் இப்படியான ஒரு பேருந்து வர உள்ளது என்பது பொது மக்களிடமும், மற்ற தனியார் பேருந்து இயக்கும் நிறுவனங்களால் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். இப்பேருந்து வெற்றிகரமாக இயங்கினால் இதை பார்த்து மேலும் சில தனியார் பேருந்துகள் இயற்கை எரிவாயுக்கு மாறினால் அது உலக மக்களுக்கு நன்மையாக முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News