பொங்கலூரில் சத்துணவு ஊழியர்கள் சமையல் செய்து நூதன போராட்டம்
- ஜி.பி.எப் கடன் கேட்டு விண்ணப்பம் அளித்துள்ள அனைவருக்கும் உடனே கடன் வழங்க வேண்டும்.
- சிறப்பு ஊக்கத்தொகை நிலுவையை உடனே வழங்க வேண்டும்.
பல்லடம் :
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் பொங்கலூர் ஒன்றியத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் விஜயலட்சுமி போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
போராட்டத்தின் போது ஜி. பி. எப் கடன் கேட்டு விண்ணப்பம் அளித்துள்ள அனைவருக்கும் உடனே கடன் வழங்க வேண்டும். 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் மற்றும் 30 ஆண்டுகள் பணி முடித்துள்ள அனைவருக்கும் சிறப்பு ஊக்கத்தொகை நிலுவையை உடனே வழங்க வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்டக் காலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கூடியிருந்தவர்கள் கோஷமிட்டனர். மேலும் அங்கேயே சமையல் செய்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த போராட்டத்தின் போது மாவட்ட செயலாளர் முருகேசன், மாவட்ட இணை செயலாளர் ஜெயந்தி, மாநில செயற்குழு உறுப்பினர் பாக்கியம் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் மெர்சி, சுதா, ராஜேஸ்வரி உள்பட நிர்வாகிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்கள். மதியம் தொடங்கிய இந்த போராட்டம் கோரிக்கை நிறைவேறும் வரை இங்கேயே காத்திருப்பு போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.
இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு ) சிவ சண்முகம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ஆகஸ்ட் மாதம் 4 ந்தேதி மற்றும் 20ந்தேதிகளில் இரண்டு தவணைகளில் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து இரவு 7 மணி அளவில் போராட்டம் கைவிடப்பட்டது.