அரசு வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.6 லட்சம் மோசடி
- ஒருவர் பட்டபடிப்பு படித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்தார்.
- உன்னால் ஆனதைப் பார் என மிரட்டும் வகையில் அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது.
பல்லடம்:
பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் பட்டபடிப்பு படித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்தார். அப்போது வடுகபாளையம்புதூரை சேர்ந்த பிரமுகர் ஒருவர் கிராம உதவியாளர் வேலைக்கு அவரை சேர்த்து விடுவதாகவும், அதற்கு ரூ.6 லட்சம் செலவாகும் என்று கூறியுள்ளார். அரசு வேலைக்கு ஆசைப்பட்ட அந்த வாலிபரின் குடும்பத்தினர் அந்தப் பிரமுகரிடம் 2 தவணைகளாக ரூ. 6 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் பணம் கொடுத்து 10 மாதங்கள் ஆகியும் வேலை கிடைக்காததால் அவரிடம் பணத்தைத் திருப்பி கொடுக்குமாறு வற்புறுத்தி உள்ளனர்.
அவர் பணம் என்னிடம் இல்லை . திருப்பூரைச் சேர்ந்த ஒருவரிடம் கொடுத்துள்ளேன். அவர் அமைச்சர் ஒருவரிடம் கொடுத்து வேலைக்காக பேசிக்கொண்டு உள்ளார் என கூறியுள்ளார். மீண்டும், மீண்டும் பணம் கேட்கவே பணத்தைத் திருப்பித் தர முடியாது , உன்னால் ஆனதைப் பார் என மிரட்டும் வகையில் அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வேலைக்காக பணம் கொடுத்து பாதிக்கப்பட்டவர் மற்றும் பணம் பெற்றவர் பேசிக் கொள்ளும் ஆடியோ பல்லடம் பகுதியில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.