உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

உயர்கல்வி போட்டி தேர்வு அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க திட்டம்

Published On 2022-11-19 11:51 GMT   |   Update On 2022-11-19 11:51 GMT
  • பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற தீவிர பயிற்சி மேற்கொள்ள வேண்டியதுள்ளது.
  • சனிக்கிழமைகளில் பயிற்சி வழங்க, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருப்பூர் :

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற தீவிர பயிற்சி மேற்கொள்ள வேண்டியதுள்ளது. ஏழை மாணவர்கள் தனியார் மையங்களில் பயில, போதுமான பொருளாதார வசதி இருப்பதில்லை.இவர்களுக்கு உதவும் வகையில், கல்வித்துறையும், பயிற்சிகள் அளிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் போட்டித்தேர்வுகளுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு, வாரத்தில் சனிக்கிழமைகளில் பயிற்சி வழங்க, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றியத்திற்கு ஒரு மையம் வீதம் 412 பயற்சி மையங்கள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன.

அதன்படி திருப்பூர் மாவட்டத்தில், பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள், பிளஸ் 1 வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், (அதிகபட்சம் 50 மாணவர்கள் ஒரு ஒன்றியத்துக்கு), பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள், 10-ம்வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் (ஒரு ஒன்றியத்துக்கு அதிகபட்சம், 20 மாணவர்கள்) தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இது குறித்து திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது :- மாணவர்களில், ஓ.சி., மற்றும் ஓ.பி.சி., பிரிவை சார்ந்தவர்களுக்கு 60 சதவீத மதிப்பெண்களும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களாக கொண்டு, பிளஸ் 2 வகுப்பில் 50 சதவீத மாணவர்களும், பிளஸ் 1 வகுப்பில், 20 மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டு கல்வித்துறை சார்பில் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

2017-18, 2018-19, 2019-20ம் கல்வியாண்டுகளில் மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற பாட ஆசிரியர்கள் மைய ஒருங்கிணைப்பாளராக இருப்பர். இந்த வாய்ப்பை பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இந்த பயிற்சியின் வாயிலாக போட்டித்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற முடியும் என்றனர்.  

Tags:    

Similar News