கணக்கில் வராத பணம் பறிமுதல் - ஆர்.டி.ஓ., பத்திரப்பதிவு துறை அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி விசாரணை
- சோதனையில் கணக்கில் வராத ரூ.61 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.
- 10 க்கும் மேற்பட்டோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருப்பூர் :
தமிழகம் முழுவதும் பத்திர பதிவுத்துறை, வட்டாரப் போக்குவரத்துத் துறை உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினா். இதன் ஒரு பகுதியாக திருப்பூா் நெருப்பெரிச்சலில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப் பதிவுத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., தட்சிணாமூா்த்தி தலைமையிலான போலீசாா் சோதனை நடத்தினா்.
இதில் பணியில் இருந்த பதிவாளா், சாா் பதிவாளா்கள், ஊழியா்கள் உள்ளிட்ட அனைவரிடமும் சோதனை நடத்தினா். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.61 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.
அதேபோல திருப்பூா் சிறுபூலுவபட்டியில் உள்ள வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினா். மேலும், வஞ்சிபாளையம் சாலையில் உள்ள வட்டாரப் போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சொந்தமான மையத்துக்குச் சென்று அங்கு பணியில் இருந்த வாகன ஆய்வாளா்கள், இடைத்தரகா்கள், வாகன ஓட்டிகளிடமும் சோதனை நடத்தினா்.இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1.48 லட்சம் என மொத்தம் ரூ.2.09 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.இது தொடா்பாக ஆர்.டி.ஓ. மற்றும் பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் சுமாா் 10 க்கும் மேற்பட்டோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.