ஓணம் சீசனை இலக்காக வைத்து பொரியல் தட்டை சாகுபடி
- கிடைக்கும் தண்ணீரை பொறுத்தும், நல்ல விலை கிடைக்கும் சீசன்களை இலக்காக வைத்து நடவு பணிகளை மேற்கொள்கின்றனர்
- அதிக நோய்த்தாக்குதலும் இச்சாகுபடியில் ஏற்படுவதில்லை
உடுமலை,ஜூலை.17-
உடுமலை சுற்றுப்பகுதிகளில் கிணற்றுப்பாசனத்துக்கு, பல்வேறு காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இந்தாண்டு கோடை கால மழை போதிய அளவு பெய்யாமல், நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது.
கிடைக்கும் தண்ணீரை பொறுத்தும், நல்ல விலை கிடைக்கும் சீசன்களை இலக்காக வைத்து நடவு பணிகளை மேற்கொள்கின்றனர். அவ்வகையில் கேரளாவில், பொரியல் தட்டைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவே, குறைந்த தண்ணீர் வசதியுள்ள பகுதிகளில் இச்சாகுபடியை ஆண்டு முழுவதும் மேற்கொள்கின்றனர்.
தற்போது கோட்டமங்கலம், மைவாடி உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக இச்சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
இப்பகுதியில் விளையும் பொரியல் தட்டை, கேரளா மாநிலம் பாலக்காடு, மூணாறு, மறையூர் போன்ற பகுதிகளுக்கு அதிகளவு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.நடவு செய்து செடிகளுக்கு 50 நாட்கள் ஆன பிறகு காய்களை குறிப்பிட்ட இடைவெளி விட்டு அறுவடை செய்யலாம்.ஏக்கருக்கு சராசரியாக 100 முதல் 150 கிலோ வரை ஒரு பறிப்பில் கிடைக்கும். அதிக நோய்த்தாக்குதலும் இச்சாகுபடியில் ஏற்படுவதில்லை.கடந்தாண்டு போதிய விலை கிடைக்கவில்லை. ஓணம் பண்டிகை சீசனில் நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது.
முக்கிய சீசனில் கேரளா வியாபாரிகள் நேரடியாக விளைநிலங்களுக்கு வந்து கொள்முதல் செய்து கொள்வதால் விற்பனை சந்தை பிரச்னையும் இல்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்