மின்கட்டணம் உயர்த்தப்பட்டால் ஜவுளி தொழில் காணாமல் போகும் - விசைத்தறியாளர்கள் கவலை
- 10 விசைத்தறிகளை வைத்து நெசவு செய்ய 25 - 30 லட்சம் ரூபாய் வரை தேவை.
- தமிழக அரசு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கி வருகிறது.
பல்லடம் :
கோவையில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சார்பிலான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில், தொழில் துறையினர் பங்கேற்றனர்.அதில் பங்கேற்ற திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் பேசியதாவது:-
சொந்த கட்டடம் கட்டி, குறைந்தபட்சம் 10 விசைத்தறிகளை வைத்து நெசவு செய்ய 25 - 30 லட்சம் ரூபாய் வரை தேவை. இவ்வாறு, முதலீடு செய்தாலும், 30 ஆயிரம் ரூபாய் தான் வருவாய் கிடைக்கும். இவ்வாறு குறுந்தொழிலாக உள்ள விசைத்தறி தொழிலுக்கு, தமிழக அரசு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கி வருகிறது.பண மதிப்பிழப்பு, அகமதாபாத் டையிங் பிரச்னை, ஜி.எஸ்.டி., கொரோனா ஊரடங்கு, கூலி பிரச்னை, மற்றும் நூல் விலை உயர்வு என, கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ச்சியாக பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். நாங்கள் கூலிக்கு நெசவு செய்பவர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.பல கட்ட போராட்டத்துக்குப் பின், கூலி உயர்வு கிடைத்தது. தற்போது போராடி பெற்ற கூலிக்கு மேல் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. மின்கட்டணம் உயர்த்தப்பட்டால் விசைத்தறி தொழில் காணாமல் போகும் அபாயம் உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.