ஊதியூர் காப்புக்காட்டை வாழ்விடமாக்கிய சிறுத்தை தொடர்ந்து கண்காணிக்கும் வனத்துறை
- அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்திருந்தனர்.
- வனத்துறை சார்பில் வனப்பகுதியை சுற்றி 15க்கும் மேற்பட்ட இடங்களில் கேமரா வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகேயுள்ள ஊதியூர் காப்புக்காட்டில் கடந்த மார்ச் மாதம் சிறுத்தை தென்பட்டது. நாமக்கல், கரூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.அவ்வப்போது காட்டில் இருந்து வெளியே வரும் சிறுத்தை அருகேயுள்ள விவசாய தோட்டங்களில் மேய்ச்சலுக்கு விடப்படும் ஆடுகள், வளர்ப்பு நாய், பட்டியில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடு உள்ளிட்ட விலங்குகளை அடித்து, தூக்கி சென்ற சம்பவம் அவ்வப்போது நடந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்திருந்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலையை ஒட்டியிருந்த கோவிலுக்கு பக்தர்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இரவு நேரங்களில் காப்புக்காடு பகுதிக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வனத்துறை சார்பில் வனப்பகுதியை சுற்றி 15க்கும் மேற்பட்ட இடங்களில் கேமரா வைத்து, சிறுத்தை நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது. சிறுத்தையை பிடிக்க ஆங்காங்கே கூண்டும் வைக்கப்பட்டது. அவ்வப்போது கேமராவில் சிக்கிய சிறுத்தை கூண்டுக்குள் அகப்படவில்லை.
தற்போதைய நிலை குறித்து காங்கயம் வனத்துறையினர் கூறியதாவது:-
ஊதியூர் காப்புக்காடு வளம் நிறைந்த காடாக இருப்பதால் சிறுத்தை அங்கேயே தங்கிவிட்டது. முள்ளம்பன்றி, குரங்கு உள்ளிட்ட விலங்கினங்களை சிறுத்தை அடித்து உணவாக்கி கொண்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.கடந்த 42 நாளாக கேமராவில் சிறுத்தை அகப்படவில்லை. இந்த காப்புக்காடு வளம் நிறைந்தது என்பது இதன் வாயிலாக தெரிய வருகிறது.சிறுத்தை வெளியே வராமல் அப்பகுதியை தனது வாழ்விடமாக்கிக் கொண்டிருக்கலாம்.அல்லது தான் வந்த வழியே வெளியே சென்றிருக்கலாம். இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.
தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.