தமிழகத்தின் பாதுகாப்பில் காவல் துறை நுண்ணறிவு பிரிவு முன்னுரிமை அளிக்க வேண்டும் இந்து முன்னணி வலியுறுத்தல்
- கன்னியாகுமரி களியக்காவிளை சோதனைச் சாவடியில் உதவி ஆய்வாளா் வில்சன் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
- 11 இஸ்லாமிய அமைப்புகளில் 5 அமைப்புகள் மீதான தடையை இலங்கை அரசு விலக்கியுள்ளது.
திருப்பூர்:
தமிழகத்தின் பாதுகாப்புக்கு காவல் துறை நுண்ணறிவுப் பிரிவு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
இலங்கை செயின்ட் ஆண்டனி தேவாலயத்தில் கடந்த 2019-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதைத்தொடா்ந்து 3 தேவாலயங்கள், 4 நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 400-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். 500-க்கும் மேற்பட்டோா் படுகாயம் அடைந்தனா்.
இந்த தாக்குதல் கிறிஸ்தவா்களை குறிவைத்து ஜிகாதி அமைப்பால் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்கள் தமிழகத்திலும் கைது செய்யப்பட்டனா். இதையடுத்து, 2020-ம் ஆண்டு கன்னியாகுமரி களியக்காவிளை சோதனைச் சாவடியில் உதவி ஆய்வாளா் வில்சன் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
இந்நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக தடை செய்யப்பட்ட 11 இஸ்லாமிய அமைப்புகளில் 5 அமைப்புகள் மீதான தடையை இலங்கை அரசு விலக்கியுள்ளது.கேரளாவில் ஜிகாதி பயங்கரவாதிகள் ஆயுதப் பயிற்சி செய்து வந்த 24 ஏக்கா் இடத்தை என்ஐஏ .,கையகப்படுத்தியுள்ளது. தமிழகத்திலும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஆயுதப் பயிற்சி செய்த இடத்தை என்ஐஏ., அடையாளம் கண்டுள்ளது. தமிழக கடல் எல்லைப்பகுதியில் போதை மருந்து கடத்தல், ஆயுதக் கடத்தல் நடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே தமிழகத்தின் பாதுகாப்பில் காவல் துறை நுண்ணறிவுப் பிரிவு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.