உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

Published On 2022-09-09 08:17 GMT   |   Update On 2022-09-09 08:17 GMT
  • 2016ல் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளில் பதவிக்காலம் முடிகிறது.
  • 66வது மகாசபை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் :

தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கமான சைமாவில் 6 நிர்வாக பதவி, 21 செயற்குழு உறுப்பினர் பதவிகள் உள்ளன. 2016ல் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளில் பதவிக்காலம் முடிகிறது.கடந்த 2ந்தேதி கூடிய செயற்குழுவில் தற்போது உள்ள நிர்வாகிகளே, 2022 - 2025ம் ஆண்டில் பதவியில் தொடரலாம் எனவும், உறுப்பினர் யாரேனும் தெரிவித்தால் சங்க விதிமுறைகள்படி தேர்தல் நடத்தப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது.வருகிற 29ந்தேதி மாலை 4:30 மணிக்கு, ஹார்வி ரோட்டில் உள்ள சங்க அரங்கில் 66வது மகாசபை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலை தவிர்க்கும் சைமாவின் செயற்குழு முடிவு ஒருதரப்பு உறுப்பினர் குழுவினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.புதியவர்கள், இளைஞர்களுக்கு மூத்த நிர்வாகிகள் வழிவிடவேண்டும் என சங்க தலைமையை வலியுறுத்தி தேர்தலுக்கு ஆயத்தமாகிவருகின்றனர். எதிர்ப்போருக்கு பதவி வழங்கி தேர்தலை தவிர்ப்பதற்காக அமைதி பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில் 7 நிர்வாக பதவி,20 செயற்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வருகிற 30-ந்தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு இன்று கடைசி தேதி. இந்தநிலையில் கே.எம். நிட்வேர் நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியத்தை தலைவராக கொண்டு அனைத்து நிர்வாக மற்றும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 27 பேர் திரண்டு வந்து சங்க அலுவலகத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தலைவர் பதவிக்கு சுப்பிரமணியம், துணை தலைவருக்கு பெஸ்ட் கார்ப்பரேஷன் ராஜ்குமார், எஸ்.என்.க்யூ.எஸ்., இளங்கோவன், பொதுச்செயலாளருக்கு எஸ்.டி. எக்ஸ்போர்ட்ஸ் திருக்குமரன், இணைச் செயலாளருக்கு சில்வின் நிட் பேஷன் சின்னசாமி, ஈஸ்டன் குளோபல் கிளாத்திங் குமார் துரைசாமி, பொருளாளர் பதவிக்கு ராயல் கிளாசிக் மில் கோபாலகிருஷ்ணன் மற்றும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 20 பேர் மனுதாக்கல் செய்தனர்.

தேர்தல் குறித்து ஏற்றுமதியாளர் சங்க நிறுவன தலைவர் சக்திவேல் கூறுகையில், கடந்த 6 ஆண்டுகள் ஒரு தலைமையின் கீழ் சங்க நிர்வாகம் செயல்பட்டு வந்தது.விதிமுறைப்படி தற்போது புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டியுள்ளது. கே.எம்., நிட்வேர் சுப்பிரமணியத்தை தலைவராக கொண்டு சங்கத்தின் அனைத்து பதவிகளுக்கும் 27 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 6 ஆண்டுகளாக பதவி வகித்தோர் தற்போதைய தொழில் சூழல் உணர்ந்து தேர்தலில் போட்டியை தவிர்க்கவேண்டும் என்றார்.

Tags:    

Similar News