காயத்துடன் போராடிய மயிலுக்கு சிகிச்சை
- கால்களில் காயம் ஏற்பட்டு அது நடக்க முடியாமல் தவறி விழுந்தது.
- மயிலை காப்பாற்றிய அந்த குடும்பத்தினருக்கு பாராட்டு தெரிவித்தார்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையத்தில் வசிப்பவர் முத்துக்குமாரசாமி(வயது 51). இவர் ஆறு முத்தாம்பாளையம் ஊராட்சி 5வது வார்டு உறுப்பினராக உள்ளார். நேற்று இவரது வீட்டில் தேசிய பறவையான ஆண் மயில் ஒன்று வந்து விழுந்தது. அதன் கால்களில் காயம் ஏற்பட்டு அது நடக்க முடியாமல் தவறி விழுந்தது. இதனைப் பார்த்த முத்துக்குமாரசாமி குடும்பத்தினர் மயிலுக்கு உணவு கொடுத்து தண்ணீர் கொடுத்து பராமரிப்பு செய்தனர்.
பின்னர் இது குறித்து திருப்பூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் வன காவலர் வெங்கடேஸை அனுப்பி காயம்பட்ட அந்த மயிலை கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை பெற ஏற்பாடு செய்தார்.மேலும் மயிலை காப்பாற்றிய அந்த குடும்பத்தினருக்கு பாராட்டு தெரிவித்தார்.
தேசிய பறவையான மயிலை காப்பாற்றி உணவு கொடுத்து பராமரித்த முத்துக்குமாரசாமி குடும்பத்தாருக்கும், உடனடி நடவடிக்கை எடுத்து மயிலுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த வனத்துறைக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.