உள்ளூர் செய்திகள்
வாட்டி வதைக்கும் வெயில் - கம்பங்கூழ், மோர் விற்பனை அமோகம்
- நடைபாதை மற்றும் தள்ளுவண்டி கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
- குளிர்ந்த மோரில் கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்புடன் சீரகம் தூள் தூவி விற்பனை செய்யப்படுகிறது.
தாராபுரம் :
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக, அதிக வெப்பம் நிலவுகிறது. வெயிலில் வேலை செய்பவர்கள், வெளியில் பயணிப்போர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.இதன் காரணமாக, குளிர்பானம் மற்றும் பழரச கடைகளில் விற்பனை அதிகரித்துள்ளது. சீசனுக்கேற்ற தற்காலிக கம்பங்கூழ், நீர் மோர், மிக்ஸர் பழரசம் என நடைபாதை மற்றும் தள்ளுவண்டி கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பலரும் மோர் மற்றும் கம்பங்கூழ் குடித்து வெயில் தாக்கத்தை தணித்து வருகின்றனர்.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், குளிர்ந்த மோரில் கொத்த மல்லி, கறிவேப்பிலை, மிதமான உப்புடன் சீரகம் தூள் தூவி விற்பனை செய்யப்படுகிறது. மண்பானையில் ஊற்றி வைத்து மோர் மற்றும் கம்பங்கூழ் விற்பதால் குளிர்ச்சியாக உள்ளது. மக்கள் விரும்பி பருகுகின்றனர் என்றனர்.