உடுமலை நாராயணகவி பிறந்தநாள் விழா - உருவச்சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை
- நினைவு மண்டபத்தில் உள்ள நாராயகவி உருவசிலைக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- தமிழ்நாடு அரசு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்தது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயணகவி பிறந்தநாளையொட்டி உடுமலை நினைவு மண்டபத்தில் உள்ள நாராயகவி உருவசிலைக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:-
திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம் பூளவாடி கிராமத்தில் கிருஷ்ணசாமி செட்டியார் -முத்தம்மாள் தம்பதியினருக்கு 25.9.1899ம் ஆண்டு மகனாக உடுமலை நாராயணகவி பிறந்தார். பொது உடமை, சமத்துவம், பெண் விடுதலை, சுயமரியாதை போன்ற முற்போக்கு சிந்தனைகளை பெரியாரிடம் கற்றறிந்தார். விடுதலை போராட்டத்தின்போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடை தோறும் முழங்கியவர் ஆவார்.75 திரைப்படங்களுக்கு மேல் பாடல்களை எழுதியுள்ளார்.
தமிழ் திரைப்பட பாடல் உலகின் முடிசூடா மன்னராக திகழ்ந்த உடுமலைநாராயணகவி பகுத்தறிவு கவிஞர் ஆவார். இவரது பாடல்களின் சிறப்பை பாராட்டி22.4.1967 ம் ஆண்டு சங்கீத நாடக சங்கத்தின் சார்பில் சாகித்யா ரத்னா விருது வழங்கப்பட்டது. அதே ஆண்டில் தமிழ்நாடு அரசு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்தது.
மேலும் இவர் பாரதிதாசன், பாபநாசம் சிவன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,கவிஞர் கண்ணதாசன், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை முதலான கவிஞர் பெருமக்களுடன் நெருங்கிய நட்புண்டு சிறப்பான பணியை வெளிப்படுத்தினார்.26.6.1944 ல் திருச்சியில் நடைபெற்ற அண்ணாவின் ஓர் இரவு நாடகத்தில் இவரது பாடல் இடம் பெற்றது.
இவர் தமது முதுமை காலத்தில் தனது சொந்த ஊரான பூளவாடி கிராமத்தில் 23.5.1981ல் காலமானார்.இவரது நினைவாக முன்னாள் முதலமைச்சர் கலைஞரால் உடுமலை நாராயணகவி மணிமண்டபம் 23.2.2001 அன்று திறந்து வைக்கப்பட்டு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அவரின் பிறந்தநாளை முன்னிட்டு உடுமலைப்பேட்டை குட்டைதிடல் அருகில் அமைந்துள்ள நினைவு மண்டபத்தில் உள்ள நாராயணகவியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இவ்வாறு கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.
விழாவில் உதவி கலெக்டர் (பயிற்சி) கிர்திகா எஸ்.விஜயன் , திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன்,உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், உடுமலை நகர்மன்றத்தலைவர் மத்தின், உடுமலை ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் மகாலட்சுமி, அரசு அலுவலர்கள், உடுமலை நாராயண கவியின் வாரிசுதாரர்கள் மற்றும் உள்ளாட்சிஅமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.