உள்ளூர் செய்திகள்

பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த பெண் பூ வியாபாரி ஆனந்தி மற்றும் 2 குழந்தைகளை படத்தில் காணலாம்.

கந்து வட்டி கேட்டு மிரட்டல் - போலீசில் பெண் பூ வியாபாரி பரபரப்பு புகார்

Published On 2022-07-26 05:41 GMT   |   Update On 2022-07-26 05:41 GMT
  • பணத்தை கொடுக்காவிட்டால் மகள்களை கடத்தி விடுவதாக மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
  • வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பல்லடம் :

பல்லடம் ஜெயப்பிரகாஷ் வீதியை சேர்ந்த மாடசாமி மனைவி ஆனந்தி(வயது 34). இவர்களுக்கு 13, மற்றும் 14 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர்.இந்த நிலையில் ஆனந்தி பல்லடம் கடைவீதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் பல்லடம் பச்சாபாளையத்தை சேர்ந்த தனது உறவினரான கோவிந்தராஜ்- நந்தினி தம்பதியினரிடம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

வாங்கிய கடன் தொகையில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை பல தவணைகளில் ஆனந்தி திருப்பி செலுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ஆனந்தியை பணம் கடன் கொடுத்திருந்த உறவினர் சார்பில் பேசுவதாக கூறி வட்டிக்கு வட்டி போட்டு இன்னும் ரூ. 3 லட்சம் தர வேண்டும் என மிரட்டல் விடுத்து வருவதாகவும் பணத்தை கொடுக்காவிட்டால் ஆனந்தியின் மகள்களை கடத்தி விடுவதாக மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆனந்தி பள்ளிக்குச் சென்றிருந்த தனது மகள்களை பாதியிலேயே வீட்டுக்கு அழைத்து வந்ததோடு தனக்கு நடந்த கந்துவட்டி கொடுமை குறித்தும் மிரட்டல் விடுக்கும் நபர்கள் குறித்தும் தனது செல்போனில் பேசி அதனை வீடியோவாக வெளியிட்டுள்ளார். இது வைரலாகி பல்லடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், கந்துவட்டி கொடுமை குறித்தும், கந்துவட்டி கும்பலிடம் இருந்து தன்னையும், தனது மகள்களையும் காப்பாற்றுமாறு, பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கந்துவட்டி கொடுமையால் பெண் பூ வியாபாரி வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் பல்லடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News