விரிவாக்கம் செய்யப்பட்ட பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருமா? - பயணிகள் எதிர்பார்ப்பு
- பேருந்து நிலையம் அருகே ரவுண்டானாவும் அமைக்கப்பட்டது.
- புதிய பேருந்து நிலைய வளாகத்தில் அடிப்படை வசதிகளான கழிவறை , குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை:
உடுமலை நகராட்சி பொள்ளாச்சி- பழனிச்சாலையில் மத்திய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. தினசரி இங்கு நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன.நகரப்பேருந்துகள் மட்டுமின்றி வெளியூர் பேருந்துகள், வெளி மாவட்டங்கள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. கோவை- பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாண மாணவ, மாணவிகள் தினசரி இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தான் செல்கின்றனர்.
இது தவிர வேலைக்கு செல்பவர்கள், வியாபாரம் நிமித்தமாக வெளியூர்களுக்கு செல்பவர்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினர், சுற்றுலா பயணிகள் பழனி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் என தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் உடுமலை பஸ் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகளை நிறுத்துவதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டதால் அருகில் உள்ள வி.பி.புரத்தில் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது இதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருந்த குடியிருப்புகள் அகற்றப்பட்டு அங்கு வசித்தவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டது. பின்னர் பல ஆண்டுகளாக எந்த பணியும் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. பேருந்து நிலையம் அருகே ரவுண்டானாவும் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் வி.பி.புரத்தில் கூடுதல் பேருந்து நிலையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு நிறைவடைந்துள்ளது. பேருந்து நிலைய வளாகத்தில் சாலை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.அனைத்து பணிகளையும் உடனடியாக முடித்து பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதன் மூலம் மத்திய பேருந்து நிலையத்தில் நெருக்கடி குறையும். மேலும் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் அடிப்படை வசதிகளான கழிவறை , குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.