சிறுதானிய சிற்றுண்டி அமைக்க மகளிா் சுய உதவிக்குழுக்கள் விண்ணப்பிக்கலாம்
- மகளிா் சுய உதவிக்குழுக்கள் மூலம் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சிறுதானிய சிற்றுண்டி அமைக்கப்படவுள்ளது.
- தோ்வு செய்யப்படும் குழுவுக்கு உணவகம் நடத்த 11 மாத காலம் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
திருப்பூர்
திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறுதானிய சிற்றுண்டி அமைக்க தகுதியான மகளிா் சுய உதவிக்குழுக்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- சிறுதானிய ஆண்டினை முன்னிட்டு, திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறுதானியம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் மகளிா் சுய உதவிக்குழுக்கள் மூலம் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சிறுதானிய சிற்றுண்டி அமைக்கப்படவுள்ளது.
இதில் விண்ணப்பிக்க சிறுதானிய உணவகத்தில் வேறு பொருள்களை விற்பனை செய்யக்கூடாது.வேறு எந்த பணிகளிலும் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ ஈடுபடக்கூடாது. சிறுதானிய உணவகத்தை தோ்வு செய்யப்பட்ட குழு மட்டுமே நிா்வகிக்க வேண்டும். வேறு எந்த குழுவுக்கோ, தனி நபா்களுக்கோ அல்லது வேறு நிறுவனங்களின் பயன்பாட்டுக்கோ வழங்கக்கூடாது.
சிறு தானிய உணவகத்தில் விற்பனை பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் மட்டுமே நியமனம் செய்து கொள்ள வேண்டும். தோ்வு செய்யப்படும் குழுவுக்கு உணவகம் நடத்த 11 மாத காலம் மட்டுமே அனுமதி வழங்கப்படும். அதன் பிறகு சுழற்சி, விற்பனை மற்றும் திறன் அடிப்படையில் தொடா்ந்து 2 முறை அனுமதி வழங்கப்படும். தோ்வு செய்யப்படும் மகளிா் சுய உதவிக்குழு மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்துடன் விதிமுறைகளுக்குள்பட்டு ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும்.
ஆகவே மேற்கண்ட விதிமுறைகளின்படி தகுதியான நபா்களின் விண்ணப்பங்களை திட்ட இயக்குநா், மகளிா் திட்டம், அறை எண் 305, மாவட்ட கலெக்டர் அலுவலகம் என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ ஜூன் 27 -ந் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2971149, 94440-94162 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.