கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகளிடம் ரூ.62.64 லட்சம் மோசடி செய்த வியாபாரி கைது
- கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகளிடம் ரூ.62.64 லட்சம் மோசடி செய்த வியாபாரி கைது செய்யப்பட்டார்.
- பணத்தை ஆனந்த் தராமல் ஏமாற்றி வருவதாக கடந்த ஆண்டு புகார் பெறப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே பூட்டை கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன். விவசாயி. இவர் சங்கராபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் நெல் மற்றும் எள் உள்ளிட்ட விவசாய பொருட்களை நேரடி கொள்முதல் செய்தார். அவ்வாறு கொள்முதல் செய்த பொருட்களை மொத்தமாக தஞ்சை மாவட்டம், புனவாசல் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவரிடம் விற்பனை செய்தார். அதற்குண்டான பணத்தை ஆனந்த் தராமல் ஏமாற்றி வருவதாக கடந்த ஆண்டு புகார் பெறப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை செய்தனர்.
சம்பவத்தன்று சங்கராபுரம் அருகே பூட்டை கிராமத்தில் ஆனந்த் என்பவர் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய வந்த போது போலீசார் விரைந்து சென்று கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சங்கராபுரம் பகுதிகளில் விவசாயிகளிடம் சுமார் 8000 நெல் மற்றும் எள் மூட்டைகள் கொள்முதல் செய்து அதற்குண்டான பணம் சுமார் ரூ.62,64,628 தராமல் ஏமாற்றி வந்தது தெரியவருகிறது. மேலும் அவர் கொடுத்த காசோலையும் வங்கியில் பணம் இல்லாமல் திருப்பி விட்டுள்ளனர். இவர் மீது அரியலூர் மாவட்டத்தில் இதே போன்று விவசாயிகளிடம் மோசடி செய்த வழக்கு நிலுவையில் உள்ளது தெரி யவருகிறது. போலீசார் ஆனந்தை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.