உள்ளூர் செய்திகள் (District)

கோவில் திருவிழாவில் பழங்குடியின பெண் அன்னதானம் வழங்க எதிர்ப்பு

Published On 2024-08-21 06:26 GMT   |   Update On 2024-08-21 06:26 GMT
  • திருமணமாகி சில காலங்கள் எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் இந்த கோவிலில் வேண்டி கொண்டோம்.
  • பின்னர் 5 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பிறந்தது.

பாப்பிரெட்டிப்பட்டி:

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பிரசித்தி பெற்ற இருளப்பட்டி காளியம்மன் கோவில் உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

இந்த கோவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது. ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த கோவிலில் வழக்கம் போல இந்த ஆண்டும் தேர் திருவிழா இன்று காலை தொடங்கியது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சார்ந்த சுகனவிலாசம் (வயது 30). அவரது மனைவி அனிதா (27). வங்கி ஊழியரான அனிதாவுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் குழந்தை பாக்கியம் இல்லாததால் இருளப்பட்டி காளியம்மன் கோவிலில் குழந்தை வரம் கேட்டு வேண்டியுள்ளார்.

இந்த நிலையில் அனிதாவுக்கும் குழந்தை பிறந்ததால், அதற்குப் பரிகாரமாக நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக இருளப்பட்டி தேர் திருவிழாவில் 2500 பக்தர்களுக்கு உணவு சமைத்து அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த சிலர் அனிதாவை அன்னதானம் வழங்க விடாமல் தடுத்து கோவிலை விட்டு வெளியேற்றினர். இதனால் தம்பதியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அனிதா கூறியதாவது:-

நான் இந்த இருளப்பட்டி பகுதியை சேர்ந்தவள். எனக்கு திருமணமாகி கணவருடன் ஊத்தங்கரையில் வசித்து வருகிறேன். திருமணமாகி சில காலங்கள் எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் இந்த கோவிலில் வேண்டி கொண்டோம். பிறகு எங்களுக்கு குழந்தை பிறந்தது.

அதற்கு பரிகாரமாக இந்த கோவிலில் தேர்த்திருவிழாவின்போது அன்னதானம் வழங்குவதற்காக வந்தோம். அப்போது மாற்று சமூகத்தை சார்ந்த ஒரு சிலர் பழங்குடியின பெண்ணான நீங்கள் அன்னதானம் வழங்க கூடாது எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த நாங்கள் வேண்டுதல் நிறைவேற்ற ஒத்துழையுங்கள் என கெஞ்சி கேட்டோம். இருந்தபோதிலும் அவர்கள் எங்களை விரட்டினர்.

இந்த நிலையில் அங்கு வந்த போலீசாரிடமும் நாங்கள் அன்னதானம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். ஆனால் போலீசார் எங்களை இங்கிருந்து வெளியேற்றுவதிலேயே குறியாக செயல்பட்டனர்.

நாங்கள் எவ்வளவு எடுத்துக் கூறியும் போலீசார் எங்களை கோவில் பகுதியில் இருந்து வெளியேற்றி விட்டனர். மேலும் அருகிலுள்ள திருமண மண்டபத்தில் அரசின் அனுமதி பெற்று அன்னதானம் இடுவதற்கும் அனுமதிக்காமல் எங்களது சமையல் செய்யும் சிலிண்டர் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தி மிரட்டினர். இந்த நிலையில் ஒரு வழியாக மாலை அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டோம் என்று தெரிவித்தார்.

சம்பவம் குறித்து பாப்பி ரெட்டிப்பட்டி வட்டாட்சியரிடம் கேட்டபோது, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் அனைத்து சமூக மக்களும் வழிபாடு செய்வதற்கும் அன்னதானம் வழங்குவதற்கும் முழு உரிமை உண்டு. அதை யாராலும் தடுக்க முயற்சிகள் மேற்கொண்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இச்சம்பவம் குறித்து அறிந்த உடனேயே சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய் துறையினர் அந்த பெண்ணை அன்னதானம் வழங்குவதற்கு எந்த தடையும் ஏற்படுத்தக் கூடாது என வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் அன்னதானம் வழங்குவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது என்றார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து அரூர் டி.எஸ்.பி. ஜெகநாதன் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த சம்பவம் குறித்து அவர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாப்பிரெட்டிப் பட்டியில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் காளியம்மன் கோவிலில் பழங்குடியின பெண் அன்னதானம் வழங்குவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News