எடப்பாடி மீது தி.மு.க. மகளிர் அணியினர் புகார்
- மு.க.ஸ்டாலின் குறித்த அவதூறு பாடலை ரசித்த எடப்பாடி மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கப்பட்டது
- திருச்சி போலீஸ் கமிஷனரிடம் மகளிர் அணி புகார் மனு
திருச்சி,
திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. மகளிர் அணி அமைப்பாளர் கவிதா திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-மதுரையில் நடந்த அ.தி.மு.க. மாநாட்டில் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமானமு.க. ஸ்டாலின் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் குறித்து ஆபாசமாகவும் அவதூறாகவும் அநாகரிகமான முறையில் பாட்டு பாடி கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. மேலும் கனிமொழி எம்.பி. ஒரு பெண் என்று கூட பாராமல் அவரை மிகவும் கொச்சைப்படுத்தும் விதமாக பேசி பாடல் பாடினர். அதனை முன் வரிசையில் அமர்ந்து அ.தி.மு.க. தலைவர்கள் ரசித்து கைதட்டி சிரித்தார்கள். அதனை பார்த்து நான் மிகவும் மன உளைச்சல் அடைந்தேன்.இவ்வாறான செயல்களை ஊக்குவித்த கட்சியின் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி, சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் மீதும், அந்த பாடலை பாடியவர்கள் மீதும், சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.