ரெயில்வேகேட் பராமரிப்பு பணி- சங்கரன்கோவிலில் மாற்று வழியில் திருப்பி விடப்பட்ட வாகனங்கள்
- என்.ஜி.ஓ. காலனி ரெயில்வேகேட் பராமரிப்பு பணி இன்று காலை தொடங்கியது.
- பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மீண்டும் வழக்கமான பாதை திறக்கப்படும்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில்-ராஜபாளையம் மாநில நெடுஞ்சாலையில் உள்ள என்.ஜி.ஓ. காலனி ரெயில்வேகேட் பராமரிப்பு பணி இன்று (சனிக்கிழமை) காலை தொடங்கியது. இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதை வழியாகத் திருப்பிவிடப்பட்டுள்ளது. அதன்படி நெல்லையில் இருந்து ராஜபாளையம், மதுரை செல்லும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் சங்கரன்கோவிலில் இருந்து திருவேங்கடம், பருவக்குடி வழியாக ராஜபாளையம் பிரதானசாலையில் செல்லும். அதேபோல் ராஜபாளையம், மதுரையில் இருந்து வரும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனி வந்து அங்கிருந்து அச்சம்பட்டி சாலை சென்று வேல்ஸ் மெட்ரிக் பள்ளி, வடக்குப்புதூர் வழியாக பஸ் நிலையம் வந்து செல்லும். மாலை 6 மணிக்கு மேல் பணிகள் முடிந்தவுடன் மீண்டும் வழக்கமான பாதை திறக்கப்படும். எனவே பொதுமக்கள் மாற்று வழியைப் பயன்படுத்த கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இத்தகவலை போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் குமார் தெரிவித்துள்ளார்.