மாதந்தோறும் பணிகள் ஆய்வு செய்யப்படும்
- அமைச்சர் துரைமுருகன் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை
- குடிநீர் உள்ளிட்ட பணிகள் பகுதி வாரியாக நடைபெறும்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
கதிர் ஆனந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி, ஒப்பந்ததாரர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இதுவரை 4 முறை ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதுவரை வேலூர் மாநகராட்சியில் நிறைவான பணிகள் எதுவும் நடக்கவில்லை.
பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
இனி ஒவ்வொரு மாதமும் 6-ந் தேதி மாநகராட்சியில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்படும். அடுத்த கூட்டத்திற்குள் மாநகராட்சியில் சாலை, குடிநீர் உள்ளிட்ட பணிகள் பகுதி வாரியாக நடைபெறும்.
காவேரி மேலாண்மை குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணை நடக்க இருந்தது. கர்நாடக அரசு அவசரமாக விசாரிக்க தேவையில்லை என கூறியதை தொடர்ந்து, வழக்கு வருகிற 27-ந் தேதிக்கு ஒத்திவைக்க ப்பட்டுள்ளது. அன்று நடக்கும் விசாரணையில் தமிழகத்தின் வாதங்களை முன்வைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.