கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள்
- ராஜபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- விழாவை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
ராஜபாளையம்,
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம்- தென்காசி ரோட்டில் உள்ள குமாரசாமி ராஜா திருமண மண்டபத்தில் சமூக நலன், மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், கர்ப்பிணிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டின் முன்னிலை வகித்தார்.
விழாவை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, கர்ப்பிணிகளுக்கு சேலை, ஊட்டச்சத்து பொருட்கள், பழங்கள், தாம்பூலம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை 1000 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கினார். பின்னர் அமைச்சர் பேசிதாவது:-
வசதி வாய்ப்பு குறைவால் இந்த நிகழ்ச்சியை நடத்த முடியாத குடும்பத்தில் உள்ள கர்ப்பிணிகளுக்கு இந்த வாய்ப்பும் நன்மையும் கிடைக்காமல், குழந்தைகள் பாதிக்கப்படக் கூடாது என்ற தொலைநோக்கு பார்வையுடன் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படுகிறது.
சாதி, மத வேறுபாடின்றி அனைத்து கர்ப்பிணி தாய்மார்களும் இந்த நிகழ்ச்சியின் மூலம் பயன்பெறுவார்கள். பாதுகாப்பான தாய்மையை உறுதி செய்தல், கர்ப்பகால பராமரிப்பு குறித்த தகவல்கள் கர்ப்பிணி தாய்மார்களை சென்றடைய செய்து, அவர்கள் அதை பின்பற்றுவதை உறுதி செய்தல், கர்ப்பிணிகள் இறப்பு விகிதத்தை குறைத்தல், சிசு மரணத்தை குறைத்தல், ஆரோக்கியமான அறிவான குழந்தைகள் பிறப்பதை உயர்த்துதல், குழந்தைகளின் பிறப்பு எடை 3 கிலோவாக இருக்க வேண்டியதின் அவசியத்தை உணர்த்துதல், கர்ப்பகாலத்தில் ஏற்படும் பிரச்சினைகள் அதற்கான தீர்வுகள் குறித்து விழிப்புணர்வு எற்படுத்துதல், மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக் கொள்ள வேண்டியதின் அவசியத்தை உணர்த்துதல், குழந்தைகளின் வளர்ச்சிப்படிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மகப்பேறு உதவித்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தாய்ப்பாலின் அவசியம், நன்மைகள், இணை உணவின் அவசியம், குழந்தைகள் நோய் வாய்ப்படும் போது அளிக்கப்பட வேண்டிய கவனிப்பு போன்ற பல விவரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வருங்கால சந்ததியரை உருவாக்கும் அனைத்து கர்ப்பிணிதாய்மார்களும், கர்ப்பகாலத்தில் ஊட்டச்சத்து உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமான குழந்தைகளை பெற்று, வளமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சிங்கராஜா, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா, ராஜபாளையம் வட்டாட்சியர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.