சின்னமனூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத்தீ
- தேளி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் அடிக்கடி காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.
- சின்னமனூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ பரவி வருகிறது
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் சின்னமனூர் வனச்சரகத்திற்குட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பற்றி எரியும் காடடுத்தீயால் வனப்பகுதி அழிந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இந்த மலைத்தொடரில் எரசக்கநாயக்கனூர் பெருமாள்மலை அமைந்துள்ளது. தவிர சிறிய அளவில் ஏராளமான மலைக்குன்றுகள் காணப்படுகின்றன. இந்த மலைக்குன்றுகளில் பெய்யும் மழைநீர் அங்குள்ள மஞ்சள் நதி நீர்த்தேக்கத்தில் தேங்கும்.
45 ஏக்கர் பரபரப்பளவில் அமைந்துள்ள இந்த நீர்த்தேக்கம் சுற்றியுள்ள எரசக்கநாயக்கனூர் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. தவிர விவசாய நிலங்களிலுள்ள கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளுக்கு முக்கிய நீராதாரமாகவும் உள்ளது.
இந்நிலையில் மஞ்சள் நதி அணைக்கு நீர் வரத்து கடந்த சில ஆண்டுகளாக குறைந்து விட்டது. இதற்கு முக்கிய காரணம் பெருமாள்மலை, ஹைவேவிஸ் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்யும் மழைநீரின் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. இதனால் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்ததால் அணையில் நீர் தேங்கு பகுதிகள் தென்னந்தோப்புகளாக மாறிவிட்டன.
இதற்கிடையே இந்த வனப்பகுதியில் தொடர்ந்து பற்றி எரியும் காட்டுத்தீயால் வனப்பகுதியில் மழைப் பொழிவை ஏற்படுத்தும் அரியவகை மரங்கள் தீயில் எரிந்து, கடந்த சில ஆண்டுகளாக மழைப்பொழிவு வெகுவாக குறைந்து வருகிறது.
இதனால் இந்த நீர்த்தேக்கத்தை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள், கால்நடைகளை பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
எனவே மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடர்களில் பற்றி எரியும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த வேண்டும்.
மழைநீர் செல்லும் வழித்தடங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மஞ்சள் நதி நீர்த்தேக்க அணையில் மழைநீரை சேமிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.