உள்ளூர் செய்திகள்

குன்னூர் குடியிருப்பு பகுதியில் வனவிலங்குகள் உலா

Published On 2023-10-11 09:03 GMT   |   Update On 2023-10-11 09:17 GMT
  • தேயிலை தோட்ட பாறையில் அமர்ந்து ஒய்வெடுத்த சிறுத்தை
  • ரெயில் தண்டவாளத்தை தாண்டி, பஸ் நிலையம் வந்த காட்டெருமை

அருவங்காடு,

குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சிங்காரா பகுதியில் ஒரு சிறுத்தை வலம் வந்தது.

அது நேற்று மாலை தேயிலை தோட்டத்தில் உள்ள ஒரு பாறையில் அமர்ந்து ஓய்வெடுத்தது. இதனை அப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பார்த்து அச்சம் அடைந்தனர். சுமார் ஒரு மணி நேரம் ஓய்வெடுத்த சிறுத்தை பின்னர் தாமாகவே வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

இதற்கிடையே குன்னூர் ரயில் நிலையத்தில் ஒற்றை காட்டெருமை உலாவந்தது. இது தீடிரென அங்குள்ள தண்டவாளத்தை தாண்டி, பஸ் நிலையம் வந்து, பின்னர் மவுண்ட் ரோடு சாலை வழியாக ஆந்த பகுதிகளில் சுற்றி திரிந்தது. காட்டெருமை முக்கிய சாலையில் சென்றதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

குன்னூரில் பலத்த மழை காரணமாக மேகமூட்டமும் அதிகளவில் இருந்ததால், எதிரேவரும் காட்டெருமையை வாகன ஓட்டிகளால் சரிவர பார்க்க இயலவில்லை. அப்போது அது வாகனங்களை தாக்க முயன்றது. இதில் ஒரு சிலர் மயிரிழையில் உயிர்தபினர். பின்னர் அந்த காட்டெருமை ஒருவழியாக அருகே உள்ள வண்ணாரப்பேட்டை வனத்திற்குள் சென்று மறைந்தது.

குன்னூரில் காட்டெருமை உலா காரணமாக மவுண்ட் ரோடு பகுதியில் நேற்று மாலை 6 மணி முதல் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. எனவே நகரப்பகுதிகளுக்கு வரும் வனவிலங்குகளை கட்டுப்படுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News