இளைஞர் நலன்-விளையாட்டு அமைச்சகம் சார்பில் குற்றாலத்தில் இளையோர் கலைவிழா
- மத்திய அரசு இளைஞர்களின் நலன்கருதி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
- இளைஞர்கள் சுய தொழில் தொடங்குவதற்கு இந்திய அரசும் பல்வேறு வகையில் வங்கிக் கடன் வழங்கி வருகிறது.
தென்காசி:
மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நேரு யுவகேந்திரா சார்பாக தென்காசி மாவட்டம் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி வளாகத்தில் மாவட்ட அளவிலான இளையோர் கலைவிழா நடைபெற்றது.
வாழ்க்கையில் முன்னேற வேண்டும்
தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தனுஷ்குமார் எம்.பி., பழனிநாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் பேசியதாவது:-
மத்திய அரசு இளைஞர்களின் நலன்கருதி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. குறிப்பாக வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றது. அவற்றை பயன்படுத்தி இளைஞர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். மேலும் இளைஞர்கள் சுய தொழில் தொடங்குவதற்கு இந்திய அரசும் பல்வேறு வகையில் வங்கிக் கடன் வழங்கி வருகிறது. எனவே அவற்றை பயன்படுத்தி முறையாக அணுகி தொழில் முனைவோராக வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
இதில் பராசக்தி கல்லூரி முதல்வர் ஜெயினிலா சுந்தரி, மாவட்ட இளையோர் அலுவலர் ஞானச்சந்திரன், கள விளம்பர உதவி அலுவலர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளின் அரங்குகளும் இடம் பெற்றிருந்தன. மேலும் இந்திய அரசு மத்திய மக்கள் தொடர்பகம் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பில் பிரதமர் மோடியின் 9 ஆண்டு சேவை, ஏழைகள்நலன், மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் உள்ளடக்கிய புத்தங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டது. இதனை மாணவ, மாணவிகள் பார்வையிட்டு, வாங்கி சென்றனர்.
தொடர்ந்து பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, ஓவிய போட்டிகளும் மதியம் கிராமிய குழு நடனமும் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.