உண்மை எது

உண்மை எது: காலிஸ்தான் ஆதரவாளர் குஜராத்தியை மிரட்டியது கனடாவிலா?

Published On 2023-09-27 14:13 GMT   |   Update On 2023-09-27 14:13 GMT
  • இரு நாட்டு உறவுகளும் சீராகாத நிலையில் இந்த வீடியோ பரவியுள்ளது
  • 2023 மார்ச் மாதம் இங்கிலாந்தில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடைபெற்றது

2020-ஆம் ஆண்டு, இந்தியாவால் பயங்கரவாதி என பிரகடனப்படுத்தப்பட்ட ஹர்திப் சிங் நிஜ்ஜார் எனும் காலிஸ்தான் பயங்கரவாதி கடந்த 18 அன்று கனடாவில் சுட்டு கொல்லப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவிற்கு பெரும்பங்கு உண்டு என கனடாவின் அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியிருந்தார். இதனை ஆதாரமற்றது என இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இரு நாடுகளும் தங்கள் நாட்டு தூதர்களை திரும்ப அழைத்து கொள்ளும் அளவிற்கு இரு நாட்டு உறவு நலிவடைந்தது.

இரு நாட்டு உறவுகளும் இன்னமும் சீராகாத நிலையில் கனடாவில் நடைபெற்ற சம்பவம் என குறிப்பிடப்பட்டு சமீபத்தில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அதில் ஒரு காலிஸ்தான் ஆதரவாளர் சாலையில் சென்று கொண்டிருக்கும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவரை வழிமறித்து மிரட்டுகிறார்.

இந்த வீடியோவுடன் ஒரு குறுஞ்செய்தியையும் ஒரு பயனர் வெளியிட்டுள்ளார். அதில் "அப்பாவி குஜராத்தி தொழிலதிபரை காலிஸ்தானி 'எலிகள்' வெளிப்படையாக மிரட்டுகிறது. ஆனால் இதே 'எலிகள்' இந்திய அரசாங்கத்தின் எதிர்ப்பை கண்டதும் எங்காவது பொந்துக்குள் ஒளிந்து கொள்கின்றன" என குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், ஆய்வில் இது உண்மையல்ல என தெரிய வந்துள்ளது.

இந்திய மாநிலமான பஞ்சாபில் காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங் எனும் பயங்கரவாதிக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

2023 மார்ச் மாதம், இதனை எதிர்த்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு வெளியே புறநகரில் சவுத் ஆல் எனும் பகுதியில், காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டங்கள் நடத்தினார். அப்போது சாலையில் நடந்து சென்ற ஒரு குஜராத் மாநிலத்தை சேர்ந்தவரை காலிஸ்தான் ஆதரவாளர்களில் ஒருவர் மிரட்டினார். இது அப்போதே வீடியோவாக வலைதளங்களில் பரவியது. அதே காலகட்டத்தில்தான் இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

மார்ச் மாதம் இங்கிலாந்தில் அப்போது நடைபெற்ற சம்பவம் குறித்த வீடியோ கனடாவில் நடைபெற்றதாக தவறுதலாக பகிரப்பட்டுள்ளது.

இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

Tags:    

Similar News