குகையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட 188 வயது நபர்.. வைரல் வீடியோவின் உண்மை பின்னணி
- தானாக நிற்க முடியாதவராக கையில் தடி ஒன்றை வைத்திருக்கிறார்.
- வீடியோவில் உள்ள நபர் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்.
பெங்களூரு அருகே குகையில் இருந்து மீட்கப்பட்ட "188 வயது முதியவர்" எனக் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எக்ஸ் தளத்தில் பரவி வரும் வீடியோ கிட்டத்தட்ட 30 மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது.
இது தொடர்பான பதிவில், "இந்த இந்தியர் இப்போது ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார், அவருக்கு 188 வயது என்று கூறப்படுகிறது. பைத்தியம் பிடித்தது," என தலைப்பிடப்பட்டு இருக்கிறது. இத்துடன் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டு இருக்கிறது.
24 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில் இரண்டு ஆண்கள் முதியவருக்கு நடக்க உதவுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. முதியவர், கூன்விழுந்த நிலையில் வெள்ளை தாடியுடன், தானாக நிற்க முடியாதவராக கையில் தடி ஒன்றை வைத்திருக்கிறார்.
இந்த வீடியோ பற்றிய இணைய தேடல்களில், உண்மையில் இந்த வீடியோவில் உள்ள நபர் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் அவருக்கு 110 வயது ஆகிறது என்றும் தெரியவந்துள்ளது. மேலும் அவர் ஒரு இந்து மத துறவி என்று கூறப்படுகிறது. இதே தகவல் இந்த ஆண்டு ஜூலை மாதம் சில தனியார் செய்தி வலைதளங்களில் இடம்பெற்று இருக்கிறது.
அந்த செய்தியின் படி, வீடியோவில் உள்ள நபர் சியாராம் பாபா என்றும் அவருக்கு வயது 109 என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அவர் மத்தியப் பிரதேச மாநிலத்தின் கர்கோன் மாவட்டத்தில் நன்கு அறியப்பட்டவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.