இந்தியா

வரலாற்று சாதனையுடன் பதவியேற்கும் ஹேமந்த் சோரன்.. ஜார்கண்ட்டுக்கு படையெடுக்கும் இந்தியா கூட்டணி தலைவர்கள்

Published On 2024-11-24 08:45 GMT   |   Update On 2024-11-24 08:45 GMT
  • இன்று மாலை 4 மணியளவில் ஜார்கண்ட் ஆளுநர் சந்தோஷ் காங்வர் - ஐ சந்தித்து ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார்
  • 4 வது முறையாக ஹேமந்த் சோரன் ஜார்கண்ட் முதல்வராக பதவி ஏற்கிறார்.

 81 சட்டமன்றங்களைக் கொண்ட ஜார்கண்ட் மாநிலத்துக்குக் கடந்த நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குபதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகள் நேற்றைய தினம் நவம்பர் 23 எண்ணப்பட்டது.

இதில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஜேஎம்எம் - ராஷ்டிரிய ஜனதா தளம் - காங்கிரசை உள்ளடக்கிய [இந்தியா] கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34; காங்கிரஸ் 16; ராஷ்டிரிய ஜனதா தளம் 4 இடங்களில் வெற்றி பெற்றது. எதிரித்து போட்டியிட்ட பாஜக 21 இடங்களில் வென்றது. பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவைப்படும் நிலையில் ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 54 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைகிறது.

கடந்த 24 ஆண்டுகளில் ஜார்கண்டில் ஆளும் கட்சியே அடுத்த தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெறுவது இதுவே முதல் முறை ஆகும்.

 

இந்நிலையில் ஹேமந்த் சோரன் நாளை மறுநாள் [நவம்பர் 26] மீண்டும் ஜார்கண்ட் முதல்வராக பதவி ஏற்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 4 வது முறையாக அவர் ஜார்கண்ட் முதல்வராக பதவி ஏற்கிறார்.

கடந்த 2013 ஆம் ஆண்டில் முதன் முறையாக முதல்வர் பதவி ஏற்ற அவர் அதைத்தொடர்ந்து கடந்த 2019 தேர்தலில் வென்று இரண்டாவது முறையாக முதல்வர் ஆனார்.கடந்த ஜனவரி 31 ஆம் தேதி நில முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அப்போது இடைக்கால முதல்வராக சம்பாய் சோரன் செயல்பட்டார். 6 மாதம் கழித்து ஜாமினில் வெளியே வந்து கடந்த செப்டம்பரில் மீண்டும் மூன்றாவது முறையாக பதவி ஏற்றார். இந்நிலையில் நாளை மறுநாள் 4 வது முறையாக பதவியேற்ற உள்ளார்.

ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

 

இதற்கிடையே இன்று மாலை 4 மணியளவில் ஜார்கண்ட் ஆளுநர் சந்தோஷ் காங்வர் - ஐ சந்தித்து ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News