இந்தியா

சிட்டுக்குருவி எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி - சென்னை அறக்கட்டளைக்கு பிரதமர் மோடி பாராட்டு

Published On 2024-11-24 07:51 GMT   |   Update On 2024-11-24 07:51 GMT
  • நம்மைச் சுற்றியுள்ள பல்லுயிர் பெருக்கத்தை பராமரிப்பதில் சிட்டுக்குருவிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
  • இன்றைய தலைமுறையின் பல குழந்தைகள் சிட்டுக்குருவிகளை படங்களிலோ, வீடியோக்களிலோ மட்டுமே பார்க்கிறார்கள்.

புதுடெல்லி:

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மன் கீ பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இன்று 116-வது மன் கீ பாத் நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:-

சுவாமி விவேகானந்தரின் 162-வது பிறந்தநாள் அடுத்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. இந்த முறை சிறப்பாக கொண்டாடப்படும். ஜனவரி 11, 12-ந் தேதிகளில் டெல்லி பாரத் மண்டபத்தில் வளர்ந்த பாரத இளம் தலைவர்கள் உரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதில் மாநிலம், மாவட்டம், கிராமங்களில் இருந்து 2 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்பார்கள். ஒட்டு மொத்த குடும்பமும் அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்கள் அரசியலில் சேருமாறு செங்கோட்டையில் இருந்து வேண்டுகோள் விடுத்தேன். இதற்காக நாட்டில் பல சிறப்பு பிரசாரங்கள் நடத்தப்படும். அது போன்ற ஒரு முயற்சிதான் பாரத இளம் தலைவர்கள் உரையாடல் நிகழ்ச்சி.

இன்று என்.சி.சி. (தேசிய மாணவர் படை) தினம். என்.சி.சி என்ற பெயரைக் கேட்டவுடனே நம் பள்ளி, கல்லூரி நாட்கள் நினைவுக்கு வரும்.

நான் ஒரு என்.சி.சி உறுப்பினராக இருந்தேன். அதனால் நான் பெற்ற அனுபவம் எனக்கு விலை மதிப்பற்றது என்று முழு நம்பிக்கையுடன் சொல்ல முடியும். என்.சி.சி இளைஞர்களிடம் ஒழுக்கம், தலைமைத்துவம் மற்றும் சேவை உணர்வு வளர்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு, 'தாயின் பெயரில் ஒரு மரம்' பிரசாரத்தைத் தொடங்கினோம். இதில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர். தற்போது இந்த முயற்சி உலகின் பிற நாடுகளையும் சென்றடைகிறது.

எனது சமீபத்திய கயானா பயணத்தின் போது அந்த நாட்டு அதிபர் இர்பான் அலி, அவரது மாமியார் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் 'தாயின் பெயரில் ஒரு மரம்' பிரசாரத்தில் என்னுடன் இணைந்தனர்.

நம்மைச் சுற்றியுள்ள பல்லுயிர் பெருக்கத்தை பராமரிப்பதில் சிட்டுக்குருவிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் இன்று சிட்டுக்குருவிகள் நகரங்களில் அரிதாகவே காணப்படுகின்றன. அதிகரித்து வரும் நகரமயமாக்கல் காரணமாக, சிட்டுக்குருவிகள் நம்மை விட்டு விலகிவிட்டன.

இன்றைய தலைமுறையின் பல குழந்தைகள் சிட்டுக்குருவிகளை படங்களிலோ, வீடியோக்களிலோ மட்டுமே பார்க்கிறார்கள்.

சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான பிரசாரத்தில் சென்னையின் கூடுகள் அறக்கட்டளை பள்ளி மாணவர்களை ஈடுபடுத்துகிறது. அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் பள்ளிகளுக்குச் சென்று, அன்றாட வாழ்வில் சிட்டுக்குருவிகள் எவ்வளவு முக்கியம் என்பதை குழந்தைகளுக்குச் சொல்கிறார்கள்.

இந்த நிறுவனம் சிட்டுக்குருவிகள் கூடுகளை உருவாக்க குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கிறது. ஒரு சிறிய மர வீடு செய்ய குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கிறார்கள். அதில் சிட்டுக் குருவிகள் வாழ்வதற்கும் சாப்பிடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

புத்தகங்கள்' மனிதர்களின் சிறந்த நண்பன். இந்த நட்பை வலுப்படுத்த நூலகம் சிறந்த இடம் ஆகும். சென்னையில் குழந்தைகளுக்காக பிரகிருத அறிவகம் என்ற அத்தகைய நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இது படைப்பாற்றல் மற்றும் கற்றலின் மையமாக மாறி உள்ளது.

இந்த நூலகம் ஸ்ரீராம் கோபாலன் என்பவரின் சிந்தனையாகும். அவர் வெளிநாட்டில் பணிபுரிந்த போது குழந்தைகளிடம் படிக்கும் பழக்கத்தை வளர்ப்பது குறித்து தொடர்ந்து யோசித்தார். இந்தியா திரும்பிய பிறகு இந்த அறிவகத்தை நிறுவினார்.

இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. இங்கு குழந்தைகள் படிக்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும் கதை சொல்லும் அமர்வுகள், கலைப் பட்டறைகள், நினைவகப் பயிற்சி வகுப்புகள், ரோபாட்டிக்ஸ் பாடங்கள் , பொதுப் பேச்சு என குழந்தைகளை ஈர்க்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News