மசூதியை ஆய்வு செய்வதற்கு எதிர்ப்பு.. போலீசார் மீது பொதுமக்கள் கல் வீசி தாக்குதல்
- ஷாஹி ஜமா மசூதியை ஆய்வு செய்வதற்காக ஆய்வு குழுவினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்றுள்ளனர்.
- மசூதியை ஆய்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர்.
உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ஷாஹி ஜமா என்ற மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதியை ஆய்வு செய்ய வந்த போலீசார் மீது பொதுமக்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷாஹி ஜமா மசூதி உள்ள இடத்தில் முன்பு ஹரி ஹர் மந்திர் என்ற கோவில் இருந்ததாகவும் அதனை 1529 இல் முகலாயப் பேரரசர் பாபர் இடித்தார். பின்னர் அப்பகுதியில் மசூதி கட்டப்பட்டது என்று அம்மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மசூதியை ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டது. அதன்படி நவம்பர் 19ஆம் தேதி போலீசார் மற்றும் மசூதி நிர்வாகத்தினர் முன்னிலையில் மசூதியில் ஆய்வு செய்யப்பட்டது.
இந்நிலையில், ஷாஹி ஜமா மசூதியை ஆய்வு செய்வதற்காக ஆய்வு குழுவினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் சென்றுள்ளனர். இதனையடுத்து மசூதியை ஆய்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி நிலைமையை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
வன்முறைக்கு மத்தியிலும் ஆய்வு குழுவினர் மசூதியை ஆய்வு செய்து முடித்தனர். நவம்பர் 29 ஆம் தேதி ஆய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் ஆய்வு குழுவினர் சமர்ப்பிக்க உள்ளனர்.