ஜெ.தீபா தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை ஜனவரி 3-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
- பொருட்கள் ஏலம் விடுவதற்கு தடை நீடிப்பு.
- விசாரணை ஜனவரி 3-ந் தேதிக்கு ஒத்திவைப்பு.
பெங்களூரு:
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்றவர்களுக்கு தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வருவதற்கு முன்பே ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால், அவரது பெயர் தீர்ப்பில் இருந்து நீக்கப்பட்டது.
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் கர்நாடக அரசு வசம் உள்ளது. அந்த பொருட்களை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் தொகையை ஜெயலலிதாவின் அபராத தொகையை செலுத்தும்படி பெங்களூரு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்காக ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்கும்படி கர்நாடக அரசுக்கு அந்த கோர்ட்டு உத்தரவிட்டது.
இதற்கிடையே ஜெயலலிதாவின் வாரிசு என்பதால் அவரது பொருட்களை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் ஜெ.தீபா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து அவர் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற சிறப்பு கோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டில் ஜெ.தீபாவின் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக அரசின் சிறப்பு வக்கீல் கிரண் ஜவளி ஆஜரானார்.
அப்போது அவர், தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜராகி வாதிட மூத்த வக்கீல் சந்தேஷ் சவுட்டா தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறி ஒரு கடிதத்தை நீதிபதியிடம் வழங்கினார். அதை நீதிபதி சிவசங்கர அமரன்னவர் ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்து இந்த வழக்கின் இறுதி விசாரணையை வருகிற ஜனவரி மாதம் 3-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
எனவே ஜெயலலிதாவுக்கு சொந்தமான பொருட்கள் ஏலம் விடுவதற்கு தொடர்ந்து தடை நீடிக்கிறது.