அரசு முறை பயணமாக இங்கிலாந்து மன்னர் சார்லஸ் இந்தியா வருகிறார்
- பெங்களூருவில் 3 நாட்கள் தங்கியிருந்து ஆயுர்வேத மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை பெற்று விட்டு நாடு திரும்பினார்.
- இங்கிலாந்து அரச தம்பதியின் இந்த பயணத்தின்போது, அவர்கள் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்துக்கும் செல்வதாக கூறப்பட்டு உள்ளது.
இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லஸ், இளவரசராக இருந்தபோது கடந்த 2019-ம் ஆண்டு இந்தியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டிருந்தார்.
பின்னர் அவர் கடந்த 2022-ம் ஆண்டு மீண்டும் இந்திய பயணத்துக்கு திட்டமிட்டு இருந்தார். ஆனால் ராணி இரண்டாம் எலிசபெத் மரணத்தால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.
76 வயதாகும் மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். அதற்காக இந்த ஆண்டு தொடக்கத்தில் அவர் சிகிச்சை பெற்றார். அதில் இருந்து மீண்ட அவர் மீண்டும் வழக்கமான பணிகளில் ஈடுபட்டார்.
அந்தவகையில் கடந்த மாதம் அவர் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
அந்த பயணத்தை முடித்துக் கொண்டு தனது மனைவியும், ராணியுமான கமிலாவுடன் தனிப்பட்ட பயணமாக அவர் இந்தியா வந்தார். பெங்களூருவில் 3 நாட்கள் தங்கியிருந்து ஆயுர்வேத மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை பெற்று விட்டு நாடு திரும்பினார்.
இந்த நிலையில் மன்னர் 3-ம் சார்லஸ் - ராணி கமிலா ஆகியோர் அரசு முறை பயணமாக விரைவில் மீண்டும் இந்தியா வருவதாக அந்த நாட்டு பத்திரிகை ஒன்றில் தகவல் வெளியாகி இருக்கிறது.
இங்கிலாந்து அரச தம்பதியின் இந்த பயணத்தின்போது, அவர்கள் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்துக்கும் செல்வதாக கூறப்பட்டு உள்ளது.
இந்த பயணம் குறித்து அந்த பத்திரிகையில், 'மன்னர் மற்றும் ராணியின் இந்திய துணைக்கண்ட சுற்றுப்பயண திட்டம் தயாராக உள்ளது. இது உலக அரங்கில் இங்கிலாந்துக்கு மிகப்பெரிய அரசியல் மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்' என்று தகவல் வெளியிடப்பட்டு இருந்தது.
மன்னர் மற்றும் ராணிக்கு இது போன்ற திட்டங்களை உருவாக்க முடிவது மிகவும் ஊக்கமளிப்பதாகவும், இது மிகவும் உற்சாகமாக உள்ளதாகவும் அதில் கூறப்பட்டு இருந்தது.
சாத்தியமான நாடுகளுடனான அரச தம்பதியின் கலந்துரையாடல்களுக்கு இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம் பச்சைக்கொடி காட்டி இருப்பதாகவும், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் சுற்றுப்பயணங்களுக்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அந்த பத்திரிகை கூறியுள்ளது.