மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வென்ற தொகுதியின் 6 சட்டமன்ற இடங்களிலும் பாஜக கூட்டணி வெற்றி
- நந்தெத் மக்களவை தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி
- நந்தெத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 230 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.
இந்தாண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் 30 தொகுதிகளை கைப்பற்றி இந்தியா கூட்டணி அபார வெற்றி பெற்றிருந்தது. பாஜக கூட்டணி 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.
மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி சறுக்கினாலும் சட்டமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது.
அதே சமயம் நந்தெத் மக்களவை தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சவன் ரவீந்திர வசந்த்ராவ் 1,457 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் அந்த நந்தெத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது என்பதுதான்.
மக்களவை தேர்தலில் காங்கிரசுக்கு வாக்களித்த மக்கள் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கு வாக்களித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் முடிவுகளில் உள்ள இந்த முரண்பாடுகளை சுட்டிக்காட்டி மகாராஷ்டிராவில் முறைகேடான விதத்தில்தான் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.