ஜார்கண்ட் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய ஹேமந்த் சோரன் - நவம்பர் 28 பதவியேற்பு
- பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவைப்படும் நிலையில் ஹேமந்த் சோரன் 54 இடங்களுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறார்.
- ஆட்சியமைக்க உரிமை கோரி, கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் ஒப்படைத்தேன்.
81 சட்டமன்றங்களைக் கொண்ட ஜார்கண்ட் மாநிலத்துக்குக் கடந்த நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகள் நேற்றைய தினம் நவம்பர் 23 எண்ணப்பட்டது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34; காங்கிரஸ் 16; ராஷ்டிரிய ஜனதா தளம் 4 இடங்களில் வெற்றி பெற்றது. எதிர்த்து போட்டியிட்ட பாஜக 21 இடங்களில் வென்றது. பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவைப்படும் நிலையில் ஹேமந்த் சோரன் 54 இடங்களுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறார்.
கடந்த 24 ஆண்டுகளில் ஜார்கண்டில் ஆளும் கட்சி தொடர்ச்சியாக மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது இதுவே முதல் முறை ஆகும். இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஹேமந்த் சோரனை முதல்வராக முன்மொழிந்தனர். இந்நிலையில் இன்று [ ஞாயிற்றுக்கிழமை] ஜார்கண்ட் ஆளுநர் சந்தோஷ் குமார் காங்வர் - ஐ சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்.
ஆளுநரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோரன், ஆட்சியமைக்க உரிமை கோரி, கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் ஒப்படைத்தேன். நான் ஆட்சியமைக்க ஆளுநரும் அழைப்பு விடுத்தார். பதவியேற்பு விழா நவம்பர் 28 [வியாழக்கிழமை] நடைபெறும் என்று தெரிவித்தார்.
ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.