மகாராஷ்டிராவை கோட்டை விட்ட காங்கிரஸ்.. பாஜக வெற்றியை தீர்மானித்தது எது? - முழு பின்னணி!
- அஜித் பவார் பவார் என்சிபி 59 இடங்களில் போட்டியிட்டு 41 இடங்களில் வென்றுள்ளது. சரத் பவார் என்சிபி 89 இடங்களில் போட்டியிட்டு 10 இடங்களை மட்டுமே பெற முடிந்தது.
- மொத்தம் 288 சட்டமன்றத் தொகுதிகளில் வடக்கு மகாராஷ்டிராவில் 61 தொகுதிகளை உள்ளடக்கியது வித்ர்ப்பா பிரதேசம்
மகாராஷ்டிரா தேர்தல்
288 சட்டமன்றங்கள் கொண்ட மகாராஷ்டிராவுக்குக் கடந்த 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி இந்த தேர்தலில் 65% வாக்குகள் பதிவாகியுள்ளன. பதிவான வாக்குகளை என்னும் பணி நேற்றைய தினம் [நவம்பர் 23] வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
நேற்று பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவைப்படும் சூழலில் ஆளும் மாகயுதி [பாஜக - ஷிண்டே சேனா - அஜித் பவார் என்சிபி] 234 தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. கூட்டணியில் பாஜக மட்டுமே 132 இடங்களில் வென்றுள்ளது.
உடைந்த நம்பிக்கை
முன்னதாக இந்தாண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் 30 தொகுதிகளைக் கைப்பற்றி இந்தியா கூட்டணி அபார வெற்றி பெற்றிருந்தது. பாஜக கூட்டணி 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.
எனவே சட்டமன்றத் தேர்தலை [காங்கிரஸ் - சரத் பவார் என்சிபி - தாக்கரே சிவசேனாவை ] உள்ளடக்கிய மகா விகாஸ் அகாதி [இந்தியா] கூட்டணி சட்டமன்றத் தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொண்டது. கட்சியை உடைத்த துரோகிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று சரத் பவார் நம்பியிருந்தார்.
ஆனால் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 79 இடங்களில் போட்டியிட்டு 57 இடங்களிலும், தாக்கரே தலைமையிலான சிவசேனா 98 இடங்களில் போட்டியிட்டு 20 இடங்களிலும் வெற்றி பெற்றது. அஜித் பவார் பவார் என்சிபி 59 இடங்களில் போட்டியிட்டு 41 இடங்களில் வென்றுள்ளது.
ஆனால் சரத் பவார் என்சிபி 89 இடங்களில் போட்டியிட்டு 10 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. எனவே கட்சியை உடைத்து பாஜகவுடன் சென்ற ஷிண்டே மற்றும் அஜித் பவாரை மக்கள் ஏற்றுக்கொண்டதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.
மக்களை தேர்தலுக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் இடையில் 6 மாதங்களே இடைவெளி இருந்த நிலையில் மக்களின் இந்த திடீர் மாற்றம் எப்படி நிகழ்ந்திருக்கும் என்ற கேள்வி எழலாம். இதுகுறித்த விரிவான பார்வையை அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கின்றனர்.
தேர்தல் பாடம்
மக்களவை தேர்தல் பின்னடைவுக்கு பின்னர் சுதாரித்த ஷிண்டே தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி அவசரகால மக்கள் திட்டங்களை அமல்படுத்த தொடங்கியது.
அதில் முக்கியமானது துணை முதல்வரும் நிதியமைச்சருமான அஜித் பவார் முன்னெடுத்து தொங்கிய 'முக்கிய மந்திரி லட்கி பஹின்' திட்டம். முதலமைச்சர் பெண்கள் உதவித் தொகை திட்டம் என்று அழைக்கப்படும் இதன்மூலம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வழங்கப்பட்டது.
லட்கி பஹின்
கடந்த 4 மாதங்களாகவே மாநிலத்தில் 18 இல் இருந்து 65 வயது வரை உள்ள பின்தங்கிய குடும்பப் பின்னணி கொண்ட பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்பட்டது. இதன் மூலம் மகாராஷ்டிராவில் 2 கோடியே 25 லட்சம் பெண்கள் பலனடைந்தனர். இவர்கள் மொத்த பெண்களில் 55% ஆவர்.
இந்த திட்டம் பெண்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த உதவித் தொகையை ரூ. 2,100 ஆக உயர்த்துவதாக மகாயுதி கூட்டணி தேர்தல் வாக்குறுதி மூலம் உறுதியளித்தது. மேலும் மகாராஷ்டிரா தலைநகர் மும்பைக்கும் வரும் 5 வழிகளிலும் உள்ள சுங்கக்கட்டணத்தையும் முதல்வர் ஷிண்டே கடந்த அக்டோபர் 12 இல் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ரத்து செய்தார்.
வித்ர்ப்பா வியூகம்
இதுதவிர்த்து மொத்தம் 288 சட்டமன்றத் தொகுதிகளில் வடக்கு மகாராஷ்டிராவில் 61 தொகுதிகளை உள்ளடக்கிய வித்ர்ப்பா பிரதேசத்திற்கு முக்கியத்துவம் அளிப்பட்ட்டது. இந்த பிரதேசத்தில் பாஜக கூட்டணி கடந்த மக்களை தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது.
விவசாயம் நிறைந்த பகுதியான விதர்பாவில் சோயாபீன், பருத்தி விலை சரிவு, வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை ஆகியவை இதற்கு காரணம் ஆகும். எனவே வெங்காய ஏற்றுமதி தடையை நீக்கி, குறைந்த விலையில் விவசாயிகளிடம் இருந்து சோயாபீன் மற்றும் பருத்தியை ஆளும் பாஜக கூட்டணி அரசு கொள்முதல் செய்தது.
இது இந்த தேர்தலில் பாஜகவுக்கு கை கொடுத்திருக்கிறது. இந்த அனைத்து திட்டங்களும் மக்கள் மத்தியில் பதிய அரியானாவோடு நடக்க இருந்த சட்டமன்றத் தேர்தல் நவம்பருக்கு திட்டமிட்டு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் எதிரிக்கட்சிகள் சாடியதும் குறிப்பிடத்தக்கது.
ஓபிசி வியூகம்
அடுத்ததாக ஓபிசி பிரிவினரை குறிவைத்து நடந்தபட்ட பாஜக பிரசாரங்கள் வெற்றிக்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளது. ஓபிசிக்களில் உள்ள பல்வேறு சாதியினரை தங்களுக்கான வாக்கு வங்கியாக மற்றும் முயற்சிகளில் பாஜக ஈடுபட்டது. ஜவஹர்லால் நேரு காலத்தில் இருந்தே ஓபிசி மக்கள் ஒன்றாக இருப்பதை காங்கிரஸ் தடுக்க முயற்சித்து வருகிறது என்றும் ஓபிசி மக்களின் ஒற்றுமையைக் கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது. அதனால்தான் சாதி வாரி கணக்கெடுப்பு கோஷத்தை முன் வைக்கிறார்கள்' என்று மோடி பிரசாரம் செய்தார்.
கோட்டை விட்ட காங்கிரஸ்
ஓபிசி இடஒதுக்கீட்டை பறிக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது என்றும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனம் மாற்றப்படும் என்றும் பிரதமர் மோடி உட்பட பாஜக மேடைகள் தோறும் பிரசாரம் செய்யப்பட்டது. காங்கிரஸ் இதை பொய்யான கதை என்றும் கூறியது. ஆனால் காங்கிரஸ் தனது பிரசாரத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அலட்சியம் காட்டியதை தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தி உள்ளது.
பாஜக கூட்டணியை ஆதரித்து பிரதமர் மோடி 10 பேரணிகளில் பங்கேற்று 106 சட்டமன்ற தொகுதிகளில் பிரச்சாரம் செய்திருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 16 பேரணிகள் மூலம் 38 தொகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.
ஆனால் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் ராகுல் காந்தி 7 பிரசாரங்களிலும், மல்லிகார்ஜுன் கார்கே 9 பேரணிகளில் மட்டுமே கலந்து கொண்டனர். இது காங்கிரஸ் கட்சியினரிடையேயேயும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் பாஜக கூட்டணி வெற்றிக்காக அரியானாவில் செய்ததை போன்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் களப்பணியும் முக்கிய காரணியாக உள்ளது.
பத்தேங்கே தோ கத்தேங்கே
மேலும் இந்துக்களை குறிவைத்து எழுப்பப்பட்ட , 'பத்தேங்கே தோ கத்தேங்கே' [பிரிந்திருந்தால் நாம் வெட்டப்படுவோம்], 'ஏக் ரஹேங்கே தோ சேஃப் ரஹேங்கே' [ஒற்றுமையாக பாதுகாப்பாக இருப்போம்] என்று பிரதமர் மோடி, அமித் ஷா, யோகி ஆத்தியநாத் முதல் அடிமட்ட பிரசாரக் கூட்டங்கள் வரை எழுப்பப்பட்ட கோஷங்களும் பாஜக கூட்டணி வெற்றியை தீர்மானித்திருக்கிறது. இந்த தோல்வியில் இருந்தாவது காங்கிரஸ் பாடம் கற்குமா என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வி.